'ராமேஸ்வரம் மீனவர்கள் மாற்றிப் பேசுகிறார்கள்' - குற்றத்தை மறுக்கும் இந்திய கடலோர காவல்படை!

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை மறுத்து இந்திய கடலோர காவல்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

ராமேஸ்வரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மீனவர்கள் காயமடைந்தனர். ஆனால், இக்குற்றச்சாட்டை மறுத்து இந்திய கடலோர காவல்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “நேற்று(நவ.17) மதியம் 2:30 மணியளவில் வழக்கமான ரோந்துப் பணியில் கடலோர காவல்படை ஈடுபட்டிருந்த போது, ‘Jehovah Jireh’ எனும் பெயரில் IND-TN-09-MM-221 எனும் எண் கொண்ட மீன்பிடிப் படகில் இருந்தவர்கள் இரட்டை மடி வலை கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து, அவர்களை நாங்கள் நெருங்கிய போது, வலையை அப்படியே கடலில் போட்டுவிட்டு, தப்பித்து ஓடினர். நாங்கள் எவ்வளவோ எச்சரித்தும், நிற்காமல் சென்றுக் கொண்டே இருந்தனர். அவர்களை நாங்கள் விரட்டிச் சென்ற போது, கடலோர காவல் கப்பல் மீது, படகு மோதியது. இறுதியில், 50 நிமிடம் துரத்தலுக்கு பிறகு படகு நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, படகை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதில், எந்த மீனவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை. ரப்பர் குண்டுகள் மூலம் சுட்டதாக கூறுவதெல்லாம் தவறான தகவல். அந்த படகில் இருந்தவர்கள் மீது எந்தவிதமான துப்பாக்கிச் சூடோ அல்லது தாக்குதலையோ இந்திய கடலோர காவல்படை நிகழ்த்தவில்லை. இரட்டை மடி வலையை அவர்கள் பயன்படுத்தியதை திசைத் திருப்பவே, அந்த மீனவர்கள் இதுபோன்றதொரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர் என கருதுகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

×Close
×Close