சீன விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு: மத்திய அரசு உறுதி

சீனாவுடன் எல்லையில் நிகழும் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காணப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

சீனாவுடன் எல்லையில் நிகழும் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காணப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

வட கிழக்கு மாநிலமான சிக்கிம் எல்லையில், இந்தியா – சீனா – பூடான் ஆகிய நாடுகளின் எல்லைகள் இணைகின்றன. இந்த பகுதியில் உள்ள டோக்லாம் என்ற இடத்தில் சாலை அமைக்கும் பணியை சீனா மேற்கொண்டது.

சர்ச்சை நிலவி வரும் இந்த இடத்திற்கு பூடான் உரிமை கொண்டாடுகிறது. இதற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கிறது. மேலும்,”சிக்கன்ஸ் நெக்” அல்லது “சிலிகுரி காரிடார்” எனப்படும் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை ஏனைய இந்தியாவுடன் இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நிலபரப்பை சீனா எளிதாக சென்றடைய இது வழி செய்யும் என்பதால் இந்தியா கவலை கொண்டுள்ளது.

இதனையடுத்து, சீனா மேற்கொண்ட சாலை கட்டமைப்பு பணிகளை இந்திய ராணுவம் தடுத்தது. அங்கு ராணுவ வீரர்களை குவித்தது. பதிலுக்கு சீனாவும் தங்களது ராணுவத்தை அங்கு குவித்துள்ளது. இதனால், எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.

இது தொடர்பாக சீனா மற்றும் பூடான் நாட்டு தூதர்களை சந்தித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், பிரதமர் மோடியின் அமைதி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், சீனாவுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்னை குறித்து, அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்தேகத்திற்கு விளக்கமளிக்கும் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், அனைத்து கட்சிகளின் சார்பிலும் எம்.பி.-க்கள் 19 பேர் கலந்து கொண்டனர்.

பதற்றமான டோக்லாம் பகுதியில் நிலவிக் கொண்டிருக்கும் பிரச்னை குறித்து, செயற்கைக்கோள் வரைபடங்கள் மூலம் அனைத்துக் கட்சி எம்.பி.-க்களுக்கும் வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சீனாவுடன் எல்லையில் நிகழும் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காணப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் சீனாவில் வருகிற 26-ம் தேதியன்று நடைபெறவுள்ளது. அதில், கலந்து கொள்ளவிருக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், சீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close