ஆந்திர மாநில இடைநிலைக் கல்வி வாரியம் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் அனுப்பிய வழிகாட்டு நெறிமுறைகளில், மாணவர்களின் மதிப்பெண்களை நோட்டீஸ் பலகையில் காட்சிப்படுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தோல்வியடைந்த அல்லது குறைவான மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதை இந்த அறிவிப்பு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சக்ரபாணி மற்றும் ஸ்ரீ பத்மாவதி மகிளா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ரத்னா குமாரி ஆகியோர் அடங்கிய குழுவினர் அளித்த முடிவுகளின் அடிப்படையில், இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
1. அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கல்வி வாரியத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆசிரியர் - மாணவர்கள் விகிதம் கடைபிடிக்கப்பட வேண்டும்.
2. ஆசிரியர்களின் வேலைப் பளு கல்வி வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவே இருக்க வேண்டும்.
3. கல்லூரிக்கு ஒரு கவுன்சிலர் நியமிக்கப்பட வேண்டும் எனவும், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கென பிரத்யேகமாக மொபைல் ஆப் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4. மேலும், ஒரு பாடப்பிரிவிற்கு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே தேர்வு நடத்தப்பட வேண்டும்.
5. ஒவ்வொரு செமஸ்டர் அல்லது ஆறு மாத முடிவிலும் மாணவர்களின் பெற்றோர்களுடன் அவர்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
6. மாணவர்கள் மன அழுத்தத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க கல்லூரிகள் மேற்கொள்ள வேண்டிய சில மாற்றங்களும் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
7. மாணவர்களின் திறனை வைத்து அவர்களை ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவிற்கு மாற்றப்படுவதையும், மாணவர்களின் மதிப்பெண்களை நோட்டீஸ் பலகையில் காட்சிப்படுத்தப்படுவதையும் தவிர்க்க வேண்டும்.
8. மாணவர்கள் யோகா மற்றும் உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கேற்ற விளையாட்டு மைதானத்தையும் கல்லூரிகள் ஏற்படுத்த வேண்டும்.
9. கல்லூரி விடுதிகளில் போதுமான அளவு அறைகளில் இடம் இருக்க வேண்டும். சுகாதாரமான சுற்றுச்சூழல், சானிட்டரி நாப்கின்களை முறையாக அப்புறப்படுத்தும் வகையிலான இயந்திரத்தை வைத்திருக்க வேண்டும்.
10. கல்லூரியில் இரண்டு தளங்களுக்கு மேல் உள்ள கட்டடங்களில் லிஃப்ட் கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
இவை மட்டுமின்றி, மாணவர்களுக்கு பல முன்மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை ஆந்திர மாநில இடைநிலைக் கல்வி வாரியம் வகுத்துள்ளது.