மத்திய பிரதேச மாநிலத்தில் மாடுகள் வாங்க பணம் இல்லாததால், விவசாயி ஒருவர் தன் 2 மகள்களை மாடுகளாக ஏரில் பூட்டி நிலத்தை உழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் சேஹூர் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயி சர்தார் காலா. விவசாயம் பொய்த்து மிகவும் வறுமையான நிலையில் உள்ளதால், அவருடைய மகள்கள் ராதிகா (14), குந்தி (11) தங்ளுடைய பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர்.
இந்நிலையில், தனது நிலத்தை உழுவதற்கு மாடுகளை வாங்கவும், அவற்றை பராமரிப்பதற்கும் கூட விவசாயி சர்தாரிடம் பணம் இல்லை என தெரிகிறது. அதனால், தன் இரண்டு மகள்களையும் ஏரில் பூட்டி தன் நிலத்தை உழுதார் விவசாயி சர்தார்.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை அறிந்த மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஒருவர், அரசு திட்டங்களின் கீழ் விவசாயி சர்தாருக்கு உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தன் மகள்களை நிலத்தை உழுவதற்கு பயன்படுத்த வேண்டாம் என விவசாயியை கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான், மத்திய பிரதேச மாநிலத்தின் மாண்ட்சவுர் என்ற இடத்தில் விவசாய கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு தகுந்த ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது, ஏற்பட்ட கலவரம் மற்றும் காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் 6 விவசாயிகள் உயிரிழந்தனர். இந்த அசாதாரண சூழ்நிலையால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், அரசியல் மற்றும் முக்கிய தலைவர்கள் அப்பகுதிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், மத்திய பிரதேசத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டி அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் உண்ணாவிரதமும் இருந்தார். அதைத்தொடர்ந்தும், விவசாயிகள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், விவசாயி ஒருவர் மாடுகளை வாங்க கூட பணமில்லாமல் மகள்களை மாடுகளாக பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சி வலைகளை ஏற்படுத்தியுள்ளது.