அதிமுக ஆட்சியை கலைக்க மாட்டோம் : தமிழக அமைச்சர்களிடம் ராஜ்நாத்சிங் உறுதி

அதிமுக ஆட்சியை கலைக்க மாட்டோம் என டெல்லியில் தன்னை சந்தித்த தமிழக அமைச்சர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியிருக்கிறார்.

அதிமுக ஆட்சியை கலைக்க மாட்டோம் என தமிழக அமைச்சர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியிருக்கிறார். எனவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு இப்போதைக்கு ஆபத்து இல்லை.

அதிமுக அணிகள் குழப்பம் காரணமாக, தமிழகத்தில் நெருக்கடியான அரசியல் சூழல் நிலவுகிறது. டிடிவி.தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் மூலமாக ஆட்சிக்கு அபாயம் வரலாம் என கருதப்பட்டது. சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் இணைந்தபிறகு, இரு தரப்பும் இணைந்து முதல் முறையாக டெல்லி சென்றுள்ளனர். இவர்கள் ஆகஸ்ட் 28-ம் தேதி (நேற்று) மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை சந்தித்து பேசினர். இந்தக் குழுவில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி மற்றும் மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் ஆகியோர் இடம் பெற்றனர்.

இந்த சந்திப்பு குறித்து தம்பிதுரை, ஜெயகுமார் ஆகியோர் நிருபர்களிடம் பேசுகையில், ‘தமிழகத்திற்கு வரவேண்டிய பதினேழாயிரம் கோடி ரூபாய் தொடர்பாக பேசினோம். வேறு அரசியல் நிலவரங்கள் எதையும் பேசவில்லை.’ என்றார்கள். ஆனால் மைத்ரேயன் எம்.பி., ‘இணைந்த கரங்களாக டெல்லிக்கு வந்திருக்கிறோம். தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு, சின்னத்தை மீட்பதற்கான முயற்சிகளை செய்ய வேண்டியிருக்கிறது’ என குறிப்பிட்டார்.

தமிழகத்தின் நிதி தேவைக்காக இந்த சந்திப்பு என்றால், எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத மனோஜ்பாண்டியன் அந்தக் குழுவில் இடம் பெற்றது கேள்விக்கு உள்ளாகிறது. எனவே இரு அணிகளின் இணைப்பைத் தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்தை மீட்பது தொடர்பாக டெல்லியின் உதவியை நாடி இவர்கள் மத்திய அமைச்சர்களை சந்தித்ததாக அரசியல் வட்டாரங்களில் கூறுகின்றனர்.

இதற்கிடையே இன்று (ஆக. 30) காலையில் மேற்படி தமிழக குழுவினர், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பையும், ‘மரியாதை நிமித்தமான சந்திப்பு’ என்றே தம்பிதுரையும், ஜெயகுமாரும் வர்ணித்தனர். ஆனால் விவரமறிந்த டெல்லி வட்டாரங்களோ, ‘டிடிவி.தினகரன் அணியினரின் போர்க்கொடி காரணமாக ஆட்சிக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி’ குறித்து ராஜ்நாத்சிங்கிடம் இவர்கள் முறையிட்டதாக கூறுகின்றனர்.

பொதுவாக, மாநில ஆட்சிக்கு நெருக்கடியான காலகட்டங்களில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையைப் பெற்றே கவர்னர் இயங்குவார். அந்த வகையில் ஆளுனரின் நடவடிக்கை குறித்து அறிந்து கொள்ளவும், தங்களுக்கு உதவும்படி கேட்டுக்கொள்ளவும் இவர்கள் ராஜ்நாத்சிங்கை சந்தித்ததாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவியிருக்கிறது.

இவர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங், ‘தமிழகத்தில் ஆட்சியை கலைக்க எந்தவித முகாந்திரமும் இல்லை. உட்கட்சி விவகாரங்களில் ஆளுநர் தலையிட முடியாது. தினகரன் அணி, திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஆளுநரிடம் புகார் அளிப்பதை விட்டு சட்டபேரவை சபாநாயகரிடம் புகார் அளிக்கட்டும்’ என தெரிவித்ததாக அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

கிட்டத்தெட்ட இதே கருத்தையே இன்று தன்னை சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், ஜவாஹிருல்லா ஆகியோரிடம் கவர்னர் வித்யாசாகர் ராவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  எனவே இப்போதைக்கு எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எந்த நெருக்கடி உருவாவதையும் மத்திய அரசு விரும்பவில்லை என்றே தெரிகிறது. அதேசமயம், இரட்டை இலையை மீட்கும் விவகாரத்தில் டிடிவி.தினகரன் தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளதால், உடனடியாக இரட்டை இலை சின்னம் கிடைப்பது சந்தேகம்தான். அதில் தமிழக குழு எதிர்பார்ப்பதுபோல, மத்திய அரசின் ஆதரவு கிடைக்குமா? என்பதும் கேள்விக்குறியே!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close