நாடாளுமன்ற நிலைக் குழு: எதிர்கட்சிகளுக்கு தலைமை பொறுப்பில் இடமில்லை.. காங்கிரஸுக்கு 1 இடம் | Indian Express Tamil

நாடாளுமன்ற நிலைக் குழு: எதிர்கட்சிகளுக்கு தலைமை பொறுப்பில் இடமில்லை.. காங்கிரஸுக்கு 1 இடம்

நாடாளுமன்ற நிலைக் குழு மாற்றியமைக்கப்பட்டதில், முக்கிய எதிர்கட்சிகளான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸுக்கு துறை தலைமை பொறுப்புகள் வழங்கப்படவில்லை. காங்கிரஸுக்கு மட்டும் 1 இடம் வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நிலைக் குழு: எதிர்கட்சிகளுக்கு தலைமை பொறுப்பில் இடமில்லை.. காங்கிரஸுக்கு 1 இடம்

நாடாளுமன்ற நிலைக் குழு நேற்று மாலை மாற்றியமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில், எதிர்கட்சிகளுக்கு எந்த துறை குழுவிலும் தலைவர் பதவி ஒதுக்கப்படவில்லை. காங்கிரஸுக்கு மட்டும் ஒரு குழுவில் தலைமைப் பதவியும், இரண்டாவது பெரிய எதிர்கட்சியான திரிணாமுல் காங்கிரஸுக்கு ஓர் இடமும் வழங்கப்படவில்லை.

உள்துறை, நிதி, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரம் ஆகிய முக்கியமான துறைகளின் தலைவர் பதவிகள் 2 எதிர்கட்சிகளுக்கும் வழங்கப்படவில்லை. இந்த நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் கடுமைகாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராக பாஜக எம்பியும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான பிரிஜ் லால் நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு இந்த பதவியில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்வி இடம்பெற்றிருந்தார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சசி தரூர் எம்.பி தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவராக இருந்தார். இப்போது அந்த பதவியில் ஏக்நாத் ஷிண்டே பிரிவைச் சேர்ந்த சிவசேனா எம்.பி பிரதாப்ராவ் ஜாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தலைவராக இருந்தபோது, ​​தரூர் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களிடமிருந்து விமர்சனத்திற்கு உள்ளானார். நிஷிகாந்த் துபே உள்பட பா.ஜ.க எம்.பிக்கள் தரூரை பதவியில் இருந்து நீக்குமாறு லோக்சபா சபாநாயகருக்கு பலமுறை கடிதம் எழுதினர். இவர் மீதான குற்றச்சாட்டுகளை தரூர் மறுத்தார்.

நாடாளுமன்ற நிலைக் குழு சீரமைப்பு எதிர்கட்சிகளால் கடுமையாக சாடப்படுகிறது. “பாஜகவின் இது ஒரு கொடூரமான நடவடிக்கை. சீனாவின் ஒற்றைக் கட்சி ஆட்சி, ரஷ்ய நாட்டு ஆட்சிகளிலிருந்து பிரதமர் மோடி கவரப்படுவது போல் தெரிகிறது ” என மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகோய் விமர்சித்தார்.

நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி, இரண்டாவது பெரிய எதிர்கட்சியான திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த எம்.பிக்கள் ஒருவருக்கு கூட தலைமை பதவி வழங்கவில்லை. இதற்கு டிஎம்சி கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான குழுவின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மீண்டு நியமிக்கப்பட்டுள்ளார். “இது மோடி இந்தியா” என்று அவர் பேசினார்.

புதிய பட்டியலில் வணிகவியல் குழு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. காங்கிரசுக்கு ராஜ்யசபாவில் 31 எம்.பி.க்களும், மக்களவையில் 53 எம்.பி.க்களும், டிஎம்சிக்கு ராஜ்யசபாவில் 13 பேரும், லோக்சபாவில் 23 எம்.பி.க்களும் உள்ளனர்.

லோக்சபாவில் 24 மற்றும் ராஜ்யசபாவில் 10 எம்.பி.க்களைக் கொண்ட திமுகவுக்கு இரண்டு தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. திருச்சி சிவா தொழில்துறை குழுவிற்கும், கனிமொழி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவிற்கும் தலைமை வகிக்க உள்ளார். நாடாளுமன்ற நிலைக் குழு சீரமைப்பில் பா.ஜ.க தலைவர்கள் பட்டியலில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: No seat for opposition at helm of key parliamentary committees