ஹஜ் புனித யாத்திரைக்கான மானியம் ரத்து: மத்திய அரசு

மத்திய அரசு தற்போது முழுமையாக மானியத்தை ரத்து செய்திருப்பது இந்தாண்டு ஹஜ் பயணம் செல்வோரின் நிலைமையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஹஜ் புனித யாத்திரை செல்வோருக்காக வழங்கப்படும் மானியத்தை மத்திய அரசு முழுமையாக இன்று ரத்து செய்து அறிவித்தது.

சவுதி அரேபியாவில் உள்ள ஹஜ்-க்கு புனித பயணம் மேற்கொள்வது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றாகும். அவர்கள் விமானத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்ள மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்தாண்டு 1.5 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், ஹஜ் புனித யாத்திரை செல்வோருக்காக வழங்கப்படும் மானியத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்தது. இதற்கான அறிவிப்பை மத்திய சிறுபான்மையின துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி வெளியிட்டார். அப்போது, அந்த நிதி பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார். உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 2012-ஆம் ஆண்டு இதுகுறித்த வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், ஹஜ் யாத்திரைக்கு வழங்கப்படும் மானியம் குறித்து சில வழிமுறைகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. அதன்படி, மத்திய அரசு குழு ஒன்றை நியமித்தது. இந்த குழுவானது 2012-2022 வரை மேற்கொள்ள வேண்டிய சில பரிந்துரைகளை சமீபத்தில் சிறுபான்மையின அமைச்சகத்திடம் அறிக்கையாக தாக்கல் செய்தது. அதில் 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டுக்குள் ஹஜ் யாத்திரைக்காக வழங்கப்படும் மானியத்தை படிப்படியாக குறைக்க வேண்டும் என அக்குழு பரிந்துரைத்திருந்தது.

ஆனால், மத்திய அரசு தற்போது முழுமையாக மானியத்தை ரத்து செய்திருப்பது இந்தாண்டு ஹஜ் பயணம் செல்வோரின் நிலைமையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

×Close
×Close