’வந்தே மாதரம்’ பாடலை பாடவில்லை என்றால் தவறேதும் இல்லை என, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறினார்.
இதுகுறித்து செவ்வாய் கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் பேசிய மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, “எல்லோரும் கட்டாயமாக ‘வந்தே மாதரம்’ பாடலை பாட வேண்டும். ஆனால், அந்த பாடலை பாடாமல் இருப்பதில் தவறேதும் இல்லை.”, என அவர் கூறினார்.
“ஒருவர் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடவில்லை என்றால் அதில் தவறு ஏதும் இல்லை”, என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறினார்.
முன்னதாக, அனைத்து கல்வி நிலையங்களிலும், வாரத்திற்கு ஒருமுறை ‘வந்தே மாதரம்’ பாடல் பாடுவதை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் கருத்து தெரிவித்தது. இதற்கு பல்வேறூ அமைப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். “முஸ்லிம்களால் ‘வந்தே மாதரம்’ பாடலை ஒருபோதும் பாடவே முடியாது”, என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதே கருத்தை அடிப்படையாகக் கொண்டு மஹராஷ்டிரா, ‘வந்தே மாதரம்’ பாடலை பாடுவதை அனைத்துக் கல்வி நிலையங்களிலும் கட்டாயமாக்க வேண்டும் என மஹராஷ்டிரா பாஜக வலியுறுத்தி வருகிறது. அங்கு, ”துப்பாக்கி முனையில் தன்னை நிறுத்தி ‘வந்தே மாதரம்’ பாடலை பாட சொன்னாலும் நான் பாட மாட்டேன்”, என இஸ்லாமிய கட்சியை சேர்ந்த ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் உள்ள ராம்தாஸ் அத்வாலே, “’வந்தே மாதரம்’ பாடாவிட்டால் தவறு கிடையாது”, என கூறியதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியுள்ளது.