மாத்ருபூமி குழுமமானது தனது தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் விடுமுறை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தவதாக அறிவித்துள்ளது.
மாத்ருபூமி மீடியா குழுமத்தின் மாத்ருபூமி நியூஸ் சேனலானது கேரளாவில் பிரபலமானது. இதன் தலைமை அலுவலகம் கோழிக்கோட்டில் அமைந்துள்ளது. இந்த குழுமம் தனது தெலைக்காட்சி நிறுவத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு, மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் விடுமுறை அளிக்க முன்வந்துள்ளது. அந்த நிறுவனத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மாத்ருபூமி மீடியா நிறுவனமானது, செய்தித்தாளில் 16 பதிப்புகளை கொண்டுள்ளது. அதில் 2 பதிப்புகள் வெளிநாட்டில் உள்ளது. மேலும், அந்நிறுவத்திற்கு சொந்தமாக, புத்தக பதிப்பு நிறுவனம், எஃப்.எம் ஸ்டேஷன், மியூசிக் சேனலான கப்பா உள்ளிட்டவை இருக்கின்றன. அதில், மாத்ருபூமி நியூஸ் தொலைக்காட்சியில் பணியுரியும் பெண்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த அந்த குழுமம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து எம்.எல்.ஏ-வும், மாத்ருபூமி குழுமத்தின் இணை இயக்குநருமான ஷ்ரேயாம் குமார் கூறும்போது: மகளிர் முன்னேற்றம் குறித்து பேசுவதில் எந்தவித பயனும் இல்லை. நம்முடன் இருக்கும் பெண்களின் நிலையைக் நாம் உணர்ந்து கொண்டு அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
மும்பையில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்று தனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு, மாதவிடாய் காலத்தின் முதல்நாளில் விடுமுறை அளிப்பதாக அறிவித்திருந்தது. அந்த நிறுவனத்தின் செயல்பாட்டைக் கொண்டே, மாத்ருபூமி தொலைக்காட்சி நிறுவனத்திலும் அதனை பின்பற்ற முடிவு செய்தோம். இந்த விடுமுறையானது, ரிப்போர்ட்டர்ஸ்-க்கு மட்டுமல்லாமல் மாத்ருபூமி தொலைக்காட்சியில் பணிபுரியும் அத்தனை பெண்களுக்கும் பொருந்தும்.
இந்த திட்டத்தை முதலில் தொலைக்காட்சி நிறுவனத்தில் மட்டும் சோதனை முறையில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதன் பின்னர், எங்கள் குழுமத்தின் மற்ற பிரிவுகளுக்கும் கொண்டு வருவோம் என்று கூறினார்.