ஜம்மு காஷ்மீர்: போலீஸ் அதிகாரி கல்லால் அடித்துக் கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் போலீஸ் அதிகாரியை மர்ம கும்பல் கல்லால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு அருகே உள்ள நவ்ஹட்டா பகுதியில் உள்ளது ஜமியா மசூதி. நேற்று நள்ளிரவு அந்த மசூதியில் தொழுகை நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் போலீஸ் துணை கண்காணிப்பாளர் முகமது ஆயூப் பண்டித் பாதுபாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததார்.

அப்போது அங்கு நடைபெற்ற கல்வீச்சு தாக்குதலை அந்த போலீஸ் அதிகாரி விடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த சிலர் அந்த போலீஸ் அதிகாரியை பேட்டோ எடுத்ததாகவும், இதை போலீஸ் அதிகாரி தடுத்ததால் பிரச்சனை ஏற்பட்டதாக மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது.

இதனால் அந்த கும்பல் போலீஸ் அதிகாரியை கல்வீசி தாக்கியுள்ளது. தனது தற்காப்புக்காக அந்த அதிகாரி தனது பிஸ்டலை எடுத்து சுட்டதாகவும், ஆனால், அந்த சம்பவம் எல்லைமீறி சென்றதையடுத்து மர்ம கும்பல் அந்த அதிகாரியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால், அந்த அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீஸ் அதிகாரியின் உடலை கைப்பற்றினர். இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலீஸ் அதிகாரி ஒருவர் மர்ம கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close