தேர்தல் ஆணையத்தின் 'ஓப்பன் சவால்'... 'ஜகா' வாங்கிய கட்சிகள்!

இந்த பிரச்னையை பெரிதாக எழுப்பிய ஆம் ஆத்மி கட்சி, இந்த ஓப்பன் சேலஞ்சை "அழகல்ல" என்று குறிப்பிட்டுள்ளது

சமீபத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏ சவுரப் பரத்வாஜ், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் இருப்பதாக கூறினார். அதோடு மட்டுமில்லாமல் ஓட்டளிக்கும் போது உள்ள கோளாறுகளை, டெல்லி சட்டசபையில் நேரடியாக செய்து காண்பித்தார்.

தொடர்ந்து இதுபோன்று வந்த புகார்களை அடுத்து, தேர்தல் ஆணையம் கடந்த வாரம் நேரடியாக அதனை இயக்கி செயல் விளக்கம் தந்தது. மேலும், இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை யார்வேண்டுமானாலும் ஹேக் செய்துவிட முடியும் என விவாதிக்கப்பட்டு வருவதால், அதனை நிரூபித்து காட்டுமாறு தேர்தல் ஆணையம் சவால் விடுத்தது. வரும் ஜூன் 3-ஆம் தேதி நடக்கும் நிகழ்வின் போது, அந்த குறைகளை நிரூபித்து காட்டவேண்டும் என்றும், இதற்கு ஒப்புக் கொள்ளும் அரசியல் கட்சிகள், தங்களது விவரங்களை மே 26-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும் என கெடு விதித்தது.

மேலும், பேட்டியளித்த தேர்தல் ஆணையம், ஒப்புகைச் சீட்டு வாக்குப்பதிவு இயந்திரம் (VVPAT), இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்தப்படும் என்றது. அந்த இயந்திரம் மூலம், தனது வாக்குச்சீட்டில் உள்ள நபருக்கு சரியாகத் தான் வாக்களித்தோமா என்பதை அனைவரும் அறிய முடியும் என்றது.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) ஆகிய இரு கட்சிகள் மட்டுமே இந்த சவாலில் பங்கேற்பதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளன. மின்னணு வாக்குப்பதிவிற்கு எதிராக 15-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் ‘ஓப்பன் சவால்’க்கு இரு கட்சிகள் மட்டுமே ஒப்புக் கொண்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, இந்த பிரச்னையை பெரிதாக எழுப்பிய ஆம் ஆத்மி கட்சி, இந்த ஓப்பன் சேலஞ்சை “அழகல்ல” என்று குறிப்பிட்டுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கூறுகையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திர சோதனையின் போது, தேர்தல் ஆணையம் விதித்துள்ள “விரிவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்” என்பவை பங்கேற்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், சவாலில் பங்கேற்கும் சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறுகையில், “எங்கள் அணி இதில் பங்கேற்கிறது. நாங்கள் இன்று கடிதம் அனுப்பியுள்ளோம்” என்றார். அதேபோல், மற்றொரு கட்சியான என்சிபி, தனது கட்சியின் சார்பில் போட்டியில் பங்கேற்கும் பிரதிநிதிகளின் பெயர்களை அறிவித்துள்ளது. அதன்படி, ராஜ்ய சபா எம்பி வந்தனா சாவன், கெளரவ் ஜசக் மற்றும் யாசின் ஹுசைன் ஷேக் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த சவாலின் போது, உ.பி, உத்தர்கண்ட் மற்றும் பஞ்சாபில் நடந்த தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களே வைக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close