மக்களவையில் தமிழில் பேசிய தம்பிதுரைக்கு எம்.பி.க்கள் எதிர்ப்பு!

வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி மக்களவையில் தமிழில் பேச ஆரம்பித்தார் எம்பி தம்பிதுரை

கடந்த 1942–ம் ஆண்டு ஆகஸ்டு 8-ஆம் தேதி, பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தை மகாத்மா காந்தி அறிவித்தார். அந்த போராட்டம் தொடங்கப்பட்டு, நேற்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்தன.

அதையொட்டி நாடாளுமன்றத்தில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பேசினர். இந்த நிகழ்வு தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த துணை சபாநாயகர் தம்பிதுரையும் பேசினார்.

அப்போது அவர் தனது பேச்சை தமிழில் தொடங்கி, வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி பேச ஆரம்பித்தார். இதற்கு பிற மாநில எம்பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், தம்பிதுரை முன் அனுமதி பெறாமல் பேசுவதாகவும், அவரது பேச்சின் ஆங்கில மொழி பெயர்ப்பை தங்களுக்குத் தராமல் பேசுவதாகவும், எனவே அவர் பேசுவது புரியவில்லை என்றும் கூறினர். எனவே அவர் தமிழில் தொடர்ந்து பேசக் கூடாது என்று கூறி கூச்சலிட்டனர்.

இதனால் கோபமடைந்த தம்பிதுரை, “நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன நிலையிலும், நான் எனது தாய்மொழியில் பேச முடியாத நிலை உள்ளது. உறுப்பினர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் பேச வேண்டிய நிலை உள்ளது. தாய் மொழியில் பேசுவதென்றால் முன் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. இதே நிலைதான் மற்ற மாநில எம்பிக்களுக்கும் உள்ளது. நான் எனது மொழி பெயர்ப்பை வழங்கவில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். இதேபோல் நீங்கள் பேசும்போது ஏன் மொழிபெயர்ப்பை வழங்குவதில்லை?” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

அப்போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலையிட்டு, உறுப்பினர்களையும், துணை சபாநாயகர் தம்பிதுரையையும் சமாதானப்படுத்தினார். இதைத் தொடர்ந்து தம்பிதுரை தனது உரையை ஆங்கிலத்தில் தொடர்ந்தார். இந்த நிகழ்வு நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதேசமயம், தம்பிதுரையின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close