26 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பும் இடுக்கி அணை: மக்களுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை!

இடுக்கி அணை நிரம்புவதால், முப்படைகளும் உஷார் நிலையில் உள்ளன

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு முழுக் கொள்ளளவை எட்டுவதால், கரையோரமுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை, குறவன் மலை மற்றும் குறத்தி மலை ஆகிய இரு பெரும் மலைகளை இணைத்து கட்டப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய வளைவு அணை ஆகும். இந்த அணை 1973ம் ஆண்டு திறக்கப்பட்ட பிறகு, இதுவரை 1981 மற்றும் 1992 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டுமே நிரம்பியுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால் இடுக்கி அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து முழு கொள்ளவை (2403 அடி) எட்ட உள்ளது. அணையின் நீர்மட்டம் 2395.26 அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து முப்படைகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பகல் நேரத்தில் மட்டுமே அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்பதால் யாரும் அச்சமடைய தேவையில்லை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், இடுக்கி அணை பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே அணை நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஆரஞ்சு எச்சரிக்கை எனப்படும் இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேசிய பேரிடர் மீட்பு படையினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ள நிலையில், ராணுவ உதவியும் கோரப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close