அதிகாரத்துக்கு எதிராக யஷ்வந்த் சின்ஹா உண்மையை பேசியதில் மகிழ்ச்சி என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிய கட்டுரையில், பிரதமர் மோடியும் அவரது நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் சேர்ந்து இந்தியப் பொருளாதாரத்தையே சிதைத்து விட்டார்கள் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியிருந்தார்.
அதில், இந்த பொருளாதார சரிவு திடீரென்று ஏற்பட்டதல்ல. ஒரே நாளில் உருவானதும் அல்ல. பல ஆண்டுகளாக இதற்கான காரணங்கள் சேர்ந்து கொண்டே இருந்தன. இதை சரியாக கண்டறிந்து தேவையான மாற்று நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாம். இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு சரியான புரிதல், முழுநேர கவனம், சரி செய்வதற்கான உறுதியான நடவடிக்கைகள் ஆகியவை தேவைப்படுகிறது. ஆனால் பல்வேறு பொறுப்புகளை ஒரே நேரத்தில் சமாளித்துக் கொண்டிருக்கும் ஒரு நபரிடம் இதை எதிர்ப்பார்ப்பது அதிகப்படியானதுதான்.
ஒவ்வொரு காலாண்டிலும் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத வகையில் 5.7 சதவிகிதத்தை சந்தித்துள்ளது. அரசின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் பொருளாதார சரிவுக்கும் தொடர்பில்லை என்கிறார். அதுவும் ஒரு வகையில் சரிதான். பொருளாதார சரிவு சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை எரியும் தீயில் எண்ணை ஊற்றியுள்ளது.
மற்றொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜிடிபி வளர்ச்சியை நிர்ணயிக்கும் முறையை 2015ம் ஆண்டில் அரசு மாற்றியுள்ளது. ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த முறையை கைவிட்டு புதிய முறையை கையாண்டதால் வளர்ச்சி விகிதத்தை அது 200 அடிப்படை புள்ளிகள் அதிகமாக காட்டுகிறது. பழைய முறையில் அளவிட்டால், பொருளாதார வளர்ச்சி விகிதம் உண்மையாக 3.7 சதவிகிதம் மட்டுமே. இது மேலும் குறைவாகக் கூட இருக்கலாம்.
பொருளாதாரத்தை கட்டி உருவாக்குவதை விட, அழிப்பது எளிதானது. 1998-ம் ஆண்டில் இருந்த பொருளாதாரத்தை சீர்படுத்த தொண்ணூறுகளின் இறுதி மற்றும் 2000-த்தின் தொடக்கம் வரை பணியாற்ற வேண்டியிருந்தது. பொருளாதாரத்தை ஒரே நாளில் சீர்படுத்த யாரிடமும் மந்திரக் கோல் இல்லை. தற்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பலனை தர சில ஆண்டுகள் ஆகும். இதன் காரணமாகவே 2019ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தை சீர்படுத்துவது இயலாத காரியமாகிறது. மோசமான ஒரு சூழலை சந்தித்தே ஆக வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, அவரது கருத்துக்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், அதிகாரத்துக்கு எதிராக யஷ்வந்த் சின்ஹா உண்மையைப் பேசியுள்ளார். இனி மேலாவது பொருளாதாரம் மூழ்கிவிட்டது என்ற உண்மையை அரசு ஏற்றுக் கொள்ளுமா? என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: "முதல் உண்மை: 5.7% வளர்ச்சி விகிதம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் வளர்ச்சி விகிதம் 3.7% அல்லது அதைவிட குறைவாக உள்ளது. இரண்டாவது உண்மை: மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு புதிய விளையாட்டு" என யஷ்வந்த் சின்ஹா கூறுகிறார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது, அரசு மக்களைச் சுரண்டுகிறது. யஸ்வந்த் சின்ஹா உண்மையைப் பேசியதில் மகிழ்ச்சி. பொருளாதாரம் பற்றிய எங்கள் பார்வைகளை அவர் எதிரொலித்துள்ளார். அதிகாரத்துக்கு எதிராக அவர் உண்மையைப் பேசியுள்ளார். ஆட்சி அதிகாரம் என்ன செய்தாலும், இறுதியில் உண்மையே வெல்லும்.
Yashwant Sinha speaks Truth to Power. Will Power now admit the Truth that economy is sinking?
— P. Chidambaram (@PChidambaram_IN) 27 September 2017
TRUTH 1: "The growth rate of 5.7% is actually 3.7% or less " says Yashwant Sinha.
— P. Chidambaram (@PChidambaram_IN) 27 September 2017
ETERNAL TRUTH: No matter what Power does, ultimately Truth will prevail.
— P. Chidambaram (@PChidambaram_IN) 27 September 2017
இதே பலவீனங்களை காங்கிரஸ் சுட்டிக் காட்டியபோது எங்கள் வாயை அடைத்தனர். ஆனால் காங்கிரஸ் தொடர்ந்து நடப்பு ஆட்சியின் பேரழிவுப் பாதையை தைரியமாக பேசம். பொருளாதார வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்று இந்த அரசால் சுத்தமாகக் கணிக்க முடியவில்லை. சின்ஹாவின் கருத்தை அரசியல் செய்ய பயன்படுத்தவில்லை, எதிர்க் கட்சியினரின் விமர்சனங்களுடன் அவரது பார்வை ஒருங்கிணைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.