மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் தலைவர் பஹ்லஜ் நிஹ்லானி அப்பதவியிலிருந்து திடீரென நீக்கப்பட்டார். அவருக்கு அடுத்ததாக பிரபல பாடகர் ப்ரசூன் ஜோஷி அப்பதவியில் அமர்த்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் தலைவராக பஹ்லஜ் நிஹ்லானி கடந்த ஜனவரி மாதம், 2015-ஆம் ஆண்டு பதவியேற்றார். பதவியேற்ற முதலே அவர் மீது கடுமையான விமர்சங்கள் எழுந்தன. குறிப்பாக மத்திய பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றுக்கு பஹ்லஜ் நிஹ்லானி சார்பாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், ஆர்.எஸ்.எஸ். கொடுத்த அழுத்தம் காரணமாகவே பஹ்லஜ் நிஹ்லானி அப்பதவியில் நியமிக்கப்பட்டார் எனவும் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், பஹ்லஜ் நிஹ்லானிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வந்தன.
அதனால், திரைத்துறையினர், திரைத்துறை மாணவர்கள் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், அவர் வெள்ளிக்கிழமை திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கான காரணம் வெளியாகவில்லை. அவருக்குப் பின் பிரபல பாடகர் ப்ரசூன் ஜோஷி அப்பதவியில் அமர்த்தப்படுவார் என கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், எஃப்.டி.ஐ.ஐ. திரைப்பட கல்லூரியின் தலைவராக கஜேந்திர சௌஹான் அமர்த்தப்பட்டதிலும் அரசியல் பின்புலம் இருந்ததாக கூறப்படுகிறது.