தேர்தலில் பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட புகாரின் அடிப்படையில் மத்திய பிரதேச மாநில அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2009 சட்டசபை தேர்தலின் போது மிஸ்ரா பணம் கொடுத்து செய்தி வெளியிட செய்ததாக காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திர பார்தி தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. இதனை எதிர்த்து மிஸ்ரா சார்பில் ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அது தள்ளுபடியானது.
இந்நிலையில், மக்கள் பிரிதிநிதித்துவ சட்டம் 7 (பி) அடிப்படையில் பணம் கொடுத்து செய்தி வெளியிட்டதற்காக மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால், அவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் அவரால் போட்டி போட முடியாது. தேர்தல் ஆணைய உத்தரவின் காரணமாக அவரால் அமைச்சர் பதவியிலும் தொடர முடியாது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக நரோட்டம் மிஸ்ரா கூறியுள்ளார்.