பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் புற்றுநோய் சிகிச்சைக்காக இந்தியா வருவதற்கு மருத்துவ விசா அளிக்க இந்திய தூதரக அதிகாரிகள் மறுத்ததாக கூறி, தான் இந்தியாவிற்கு வர அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை ட்விட்டரில் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த ஃபாய்சா தன்வீர் (25), உயிருக்கு ஆபத்தான அமிலோபிளாஸ்டோமா எனும் வாய் புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத்தில் உள்ள இந்திரபிரஸ்தா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவெடுத்து, அதற்காக ரூ.10 லட்சம் முன்னதாக செலுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், சிகிச்சைக்காக இந்தியா வருவதற்காக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் மருத்துவ விசா வேண்டி விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு விசா வழங்க இந்திய தூதரக அதிகாரிகள் மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளிடையே நிலவிவரும் எல்லை பிரச்சனை, துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மோசமடைந்து வருவதால், ஃபாய்சா தன்வீருக்கு விசா மறுக்கப்பட்டதாக அவருடைய தாயார் தெரிவித்துள்ளார்.
இதனால், ஃபாய்சா சமூக வலைத்தளங்கள் மூலம் சுஷ்மா சுவராஜின் உதவியை நாடியுள்ளார். தான் இந்தியா வருவதற்கு உதவிபுரிய வேண்டும் என சுஷ்மா சுவராஜிற்கு ஃபாய்சா ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவற்றில், “என் உயிரைக் காப்பாற்ற உதவி செய்யுங்கள் மேடம்” என பதிவிட்டு அதில் சுஷ்மா சுவராஜை டேக் செய்துள்ளார் ஃபாய்சா.