பாரடைஸ் பேப்பர்ஸ்: வரியை ஏமாற்றி சொத்து சேர்த்த புகாரில் சிக்கினார் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா

பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட அதிர்வுகளே இன்னும் குறையாத நிலையில், 'பாரடைஸ் பேப்பர்ஸ்' எனும் மற்றொரு அதிரடியை கிளப்பியுள்ளது புலனாய்வு அமைப்பு.

By: November 6, 2017, 12:35:56 PM

உலகின் முன்னணி தலைவர்கள், பிரபலங்கள் ஆகியோர், தங்களது சொத்துகளை மறைத்து வரி ஏய்ப்பு செய்த விவரங்களை பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட அதிர்வுகளே இன்னும் குறையாத நிலையில், ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ எனும் மற்றொரு அதிரடியை கிளப்பியுள்ளது புலனாய்வு அமைப்பு.

வெளிநாட்டு சட்ட உதவி செய்யும் ஆப்பிள்பை என்ற நிறுவனத்திடம் இருந்து ரகசியமாகச் சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஆவணங்கள் ஆகியவற்றின் மூலம் பல இந்தியர்கள் உட்பட, கார்பரேட் நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவை எப்படி வரியை ஏமாற்றிச் சொத்துக்களைச் சேர்த்துள்ளது என்ற தகவல்கள் கிடைத்துள்ளது. இதில், 714 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக 19-வது இடத்தில் இந்தியா உள்ளதாகவும், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்ட புலனாய்வு செய்தியில் தெரியவந்துள்ளது. பனாமா பேப்பர்ஸை வெளியிட்ட சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் அமைப்புதான், இந்த பாரடைஸ் பேப்பர்ஸையும் வெளியிட்டுள்ள்ளனர். இந்த புலனாய்வில், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிக்கையும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பாரடைஸ் பேப்பர்ஸ் வெளியிட்ட வரி ஏய்ப்பு புகாரில், அமிதாப் பச்சன், விஜய் மல்லையா, சிவில் விமான போக்குவரத்து இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

தற்போது இணையமைச்சராக உள்ள ஜெயந்த் சின்ஹா, கடந்த 2014-ஆம் ஆண்டு லோக்சபா எம்.பி.யாக இருந்தார். இதற்கு முன்னதாக, ஜெயந்த் சின்ஹா, அமெரிக்க நிறுவனமான டி.லைட் டிசைன் (D.Light Design) எனும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள ஒமிட்யார் வெட்வொர்க் (Omidyar Network) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், டி.லைட் டிசைன் நிறுவனத்தின் இயக்குநராகவும் ஜெயந்த் சின்ஹா பதவி வகித்திருக்கிறார் என்பது ஆப்பிள்பை நிறுவனம் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. ஆனால், 2014-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போதும், 2016-ஆம் ஆண்டு அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டபோதும், இதுகுறித்து ஜெயந்த் சின்ஹா தேர்தல் ஆணையத்திடம் இதுகுறித்து தெரிவிக்காமல் மறைத்துவிட்டார்.

டி.லைட் டிசைன் நிறுவனம்:

இந்த நிறுவனம் கடந்த 2006-ஆம் ஆண்டு, சான் ஃப்ரான்சிஸ்கோ, கலிஃபோர்னியா ஆகிய மாகாணங்களில் துவங்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல், கரீபியன் கடலில் அமைந்துள்ள கேமன் தீவுகளில் இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமும் துவங்கப்பட்டது. ஜெயந்த் சின்ஹா கடந்த 2009-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஒமிட்யார் நெட்வொர்க் நிறுவனத்தில் இணைந்தார். இதையடுத்து, டிசம்பர் மாதம் 2013-ஆம் ஆண்டு அந்நிறுவனத்திலிருந்து விலகினார். இந்த நிறுவனம், டி.லைட் டிசைன் முதலீடு செய்துள்ளது. மேலும், டி.லைட் டிசைன் நிறுவனம், நெதர்லாந்தில் உள்ள முதலீட்டாளரிடமிருந்து 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை கேமன் தீவுகளில் உள்ள துணை நிறுவனம் வழியாக கடனாக பெற்றது. இந்த கடனுக்கான டிசம்பர் 31, 2012 தேதியிட்ட ஒப்பந்த ஆவணங்கள் ஆப்பிள்பை வெளியிட்ட ஆவணங்களில் கசிந்துள்ளன. இந்த கடன் உள்ளிட்ட முக்கிய சம்பவங்கள் நடைபெறும்போது, ஜெயந்த் சின்ஹா டி.லைட் டிசைன் நிறுவனத்தின் இயக்குநராக இருந்துள்ளார்.

புகார் குறித்து ஜெயந்த் சின்ஹா:

“நான் ஒமிட்யார் நெட்வொர்க் நிறுவனத்தின் இந்தியாவுக்கான நடவடிக்கைகளுக்கான நிர்வாக இயக்குநராக கடந்த 2009, செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றேன். அரசியலில் முழு கவனத்தை செலுத்த வேண்டும் என்பதற்காக, கடந்த 2013, டிசம்பர் மாதம் அப்பதவியிலிருந்து விலகினேன்.

ஒமிட்யார் நெட்வொர்க் நிறுவனம், டி.லைட் டிசைன் நிறுவனத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு செய்த முதலீடுகளுக்கு நான் பொறுப்பு. டி.லைட் டிசைன், சூரிய மின்சக்தி நிறுவனங்களில் உலகிலேயே முதன்மையானது. அதன்பின், 2014, நவம்பர் மாதம் வரை டி.லைட் டிசைன் நிறுவனத்தின் குழு உறுப்பினராக பணியாற்றினேன். ஜனவரி 2014 முதல் நவம்பர் 2014 வரை தன்னிச்சையான இயக்குநராக செயல்பட்டேன். அதன்பின், நவம்பர் 2014-ஆம் ஆண்டு நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின் அந்நிறுவன பொறுப்புகளிலிருந்து விலகிவிட்டேன்.

டி.லைட் டிசைன் நிறுவனத்தின் குழு உறுப்பினராக இருந்தபோது, நான் ஒமிட்யார் நிறுவனத்தின் பிரதிநிதியாக இருந்ததால் எவ்வித இழப்பீடும் டி.லைட் டிசைன் நிறுவனத்திடமிருந்து வழங்கவில்லை. ஜனவரி 2014 முதல் நவம்பர் 2014 வரை டி.லைட் டிசைன் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தபோது, ஆலோசனை வழங்குவதற்கான கட்டணமும், பங்குகளையுமே பெற்றேன். இதற்காக முறையாக வரி செலுத்தியுள்ளேன்.

ஒமிட்யார் நெட்வொர்க் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியபோது, அந்நிறுவனம் டி.லைட் டிசைன் நிறுவனம் உட்பட பல நிறுவனங்களில் முதலீடு செய்தது. இந்த நிறுவனத்தின் உறுப்பினர் என்ற முறையில், இந்த முதலீடுகளில் மேற்கொள்ளப்பட்ட வட்டிக்கு ஒரு பங்கிற்கான உரிமை எனக்கு உண்டு. இந்த முதலீடுகள் குறித்த விவரங்கள் ரகசியமானவை. அவற்றை ஒமிட்யார் நெட்வொர்க் நிறுவனம் மட்டும்தான் வெளிப்படுத்த வேண்டும். குழு உறுப்பினராக, நான் பல நிதி தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திட்டிருக்கிறேன்.”, என விளக்கமளித்தார்.

ஒமிட்யார் நெட்வொர்க் நிறுவனத்தின் விளக்கம்:

“ஒமிட்யார் நிறுவனத்தின் இந்திய இயக்குவராகவும், ஆலோசகராகவும், பங்க்குதாரராகவும் ஜெயந்த் சின்ஹா இருந்தார். ஜானவர்1, 2010 முதல் டிசம்பர் 31, 2013 வரை இங்கு பணியாற்றினார். எங்கள் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் ரகசியமானவை. அவற்றை வெளியே தெரிவிக்க முடியாது. டி.லைட் நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்து அந்நிறுவனத்திடம்தான் கேட்க வேண்டும்”, என விளக்கமளித்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Paradise papers mos jayant sinhas links with omidyar in appleby files

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X