மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளி துமளிகளுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சாட்டினார் அவர்!
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ற அடிப்படையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான உரைக்கு பதில் தெரிவித்து மக்களவையின் இன்று பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவேசமாக கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர்.
ஆனால் மோடி கொஞ்சமும் கவலைப்படாமல், உரத்த குரலில் தனது உரையை தொடர்ந்தார். அப்போது காங்கிரஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வீசினார். அதன் LIVE UPDATES இங்கு தரப்படுகிறது.
பிற்பகல் 1.46 : மோடி தனது பேச்சை நிறைவு செய்தார். பிற்பகல் 3 மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
பிற்பகல் 1.44 : ‘தேசத்தின் ராணுவம் டோக்லாம்-ல் போரிட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு கட்சியின் தலைவர்கள் சீனத் தலைவர்களை சந்திப்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். அதே கட்சி ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’கின் போது ராணுவத்தை கேள்வி எழுப்பியது’ - மோடி
‘நாம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டியிருக்கிறது. அதற்காக ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்’ - மோடி
பிற்பகல் 1.35 : ‘ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்க இந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சிலரை காயப்படுத்துவதை நான் அறிவேன். முதல்வராக பதவி வகித்தவர்களும் இன்று சிறையில் இருக்கிறார்கள். ஒருவர் எவ்வளவு அதிகாரம் மிக்கவராக இருந்தாலும், ஊழல் செய்தால் தண்டிக்கப்படுவார். இப்போது நாம் நேர்மையுகத்தில் இருக்கிறோம்’ - மோடி
பிற்பகல் 1.22 : ‘விவசாயிகளின் துயரத்தில் சிலர் அரசியல் செய்கிறார்கள். விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான வழிமுறைகள் சரியாக இல்லாததால், அவை வீணாகின்றன. எனவே உணவு பதப்படுத்தும் நடைமுறைகளை நாங்கள் வலுப்படுத்தி வருகிறோம்’ - மோடி
பிறபகல் 1.20 : மத்திய அரசின் கொள்கைகளை தொடர்ந்து மோடி பேசியபோதும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியபடியே இருந்தன.
பிற்பகல் 1.16 : ‘இன்றும் 20 கோடி மக்கள் மின்சார வசதி இல்லாமல் இருக்கிறார்கள். மின் வசதி செய்வதில் நாங்கள் முன்னேற்றம் கண்டு வருகிறோம். அதில் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்!’ - மோடி
பகல் 1.05 : ‘இளைஞர்களிடம் ஆற்றலையும் எழுச்சியையும் நான் காண்கிறேன். நடுத்தர வர்க்கத்தினருக்கு அவர்களின் இலக்கை எட்டுவதற்கான இறக்கைகளை இந்த அரசு வழங்கியிருக்கிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரித்திருக்கிறோம். இல்லை என்று நீங்கள் (எதிர்கட்சிகள்) சொல்வீர்களானால், உங்கள் கண்களை மூடிக்கொண்டு பாட்டு பாடிக்கொண்டிருக்கிறீகள் என அர்த்தம்’ - மோடி
பகல் 12.47 : ‘நாட்டின் வேலை கலாச்சாரத்தை எங்கள் அரசு மாற்றியிருக்கிறது. முந்தைய அரசைவிட கூடுதலாக சாலைகள் போட்டிருக்கிறோம். நாட்டின் உள் கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்’ - மோடி
பகல் 12.44 : ‘சர்தார் வல்லபாய் படேல், இந்தியாவின் முதல் பிரதமர் ஆகியிருந்தால் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானின் கட்டுப்பாட்டுக்கு போயிருக்காது’ என்றார் மோடி
How can one of the leaders say India got a democracy due to Pandit Nehru and the Congress Party? Is this their reading of India's history? What arrogance is this: PM @narendramodi in the Lok Sabha
— PMO India (@PMOIndia) February 7, 2018
பகல் 12.42 : ‘ஜவகர்லால் நேருவால் ஜனநாயகம் உருவானதாக ஒரு தலைவர் பேசினார். இவர்கள் இப்படித்தான் இந்திய வரலாறை படித்தார்களா? என்ன அநியாயம் இது? ராஜீவ் காந்தி தனது கட்சியின் தலித் முதல் அமைச்சரையே ஹைதராபாத் விமான நிலையத்தில் அவமானப்படுத்தினார். காங்கிரஸ் நம்மை நம்பக் கூறுவது போல, ஜவகர்லால் நேருவால் இந்தியாவுக்கு ஜனநாயகம் கிடைக்கவில்லை.
இந்தியாவின் வளமையான வரலாறை படியுங்கள். நூறாண்டுகளுக்கு முன்பே வளமையான ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்டது நமது நாடு. ஜனநாயகம், நமது கலாச்சாரம்!’ என்றார் மோடி.
The more mud you throw at us, the more the Lotus will bloom. I will not stop you, keep doing that! PM Narendra Modi tells the opposition and detractors of @BJP4India pic.twitter.com/s0eY2jYPVw
— BJP (@BJP4India) February 7, 2018
பகல் 12.35 : ‘எங்களை சில கட்சிகள் குறை கூறும் போதெல்லாம், அவர்களிடம் விஷயத்துடன் பேச எதுவும் இல்லை என்பதை பார்க்கிறோம். நாட்டை பிளவு படுத்தியவர்கள் அவர்கள். காங்கிரஸ் சரியாக செயல்பட்டிருந்தால், இந்தியா இதைவிட முன்னேற்றம் கண்டிருக்கும்.
அவர்கள் (காங்கிரஸ்) கேரளாவில் எப்படி செயல்பட்டார்கள்? அகாலிதளத்தை எப்படி நடத்தினார்கள்? தமிழ்நாட்டில் அவர்களது செயல்பாடு என்ன? ஏன் நிறைய மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தார்கள்? அவர்களுக்கு ஜனநாயகத்தில் எந்த அர்ப்பணிப்பும் இல்லை’ என கடுமையான அமளிக்கு இடையே பேசினார் மோடி.
பகல் 12.35 : ‘70 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோல தேர்தலுக்காகவும், சிறு ஆதாயங்களுக்காகவும் நாட்டை காங்கிரஸ் பிளவுபடுத்தியது. அவர்களின் சுய லாபத்திற்காக 125 கோடி இந்தியர்களும் இன்று துயரத்தை தினமும் அனுபவித்து வருகிறோம்’ என்றார் மோடி.
பகல் 12.32 : ‘வாஜ்பாய் காலத்திலும் உத்தரகாண்ட், ஜார்கண்ட் , சத்தீஸ்கர் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அவை மக்கள் விருப்பத்திற்கேற்ப செய்யப்பட்டன. நாங்கள் தெலங்கானாவுக்கு ஆதரவாக இருக்கிறோம். ஆனாலும் காங்கிரஸ் தேர்தலை மனதில் வைத்து இந்தப் பிரிவினையை செய்தது’ என குறிப்பிட்டார் மோடி.
பகல் 12.22 : கடும் அமளிக்கு இடையே பேசத் தொடங்கிய மோடி, ‘குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது 34 உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள். சிலர் எதிர்த்தார்கள். சிலர் ஆதரித்தார்கள். ஆனாலும் ஆக்கபூர்வமான விவாதம் நடந்தது’ என குறிப்பிட்டார்.
பகல் 12.16 : குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து மக்களவையில் பிரதமர் மோடி உரையை நிகழ்த்த ஆரம்பித்தார். அப்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கேட்டு கோஷங்கள் எழுந்தன.
பகல் 12.09 : ஆந்திர எம்.பி. ராமச்சந்திர ராவ், ‘பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக’ குரல் எழுப்பினார். அவரை இருக்கைக்கு செல்லும்படி ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு எச்சரித்தும், போகவில்லை. அவரை நாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்தார் நாயுடு.
பகல் 11.32 : மனிதர்களே மனித கழிவுகளை அகற்றும் பிரச்னையை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மாநிலங்களவையில் எழுப்பினர்.
பகல் 11.26 : மாநிலங்களவையில் பூஜ்ய நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. காஷ்மீரில் நேற்று தீவிரவாதிகளால் மருத்துவமனை தாக்கப்பட்ட நிகழ்வை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கிளப்பினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.