பாஜக வலையில் சிக்கிக் கொண்டாரா தெலுங்கு 'தல' பவன் கல்யாண்?

46 வயதான பவன் கல்யாண், ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்

பாஜக மீது தமிழகத்தை ஆளும் அஇஅதிமுக தற்போது அடுக்கிச் செல்லும் விமர்சனம் நம்மை மென்மேலும் ஆச்சர்யப்படுத்தி வருகிறது.

தம்பிதுரை – நிதி மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றிய இந்நாள் ஒரு கருப்பு நாள்.

ஓ.பி.எஸ் – மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வில் தமிழகத்துக்கு மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டது.

ஜெயகுமார் – மத்திய அரசு சொல்வதற்கு எல்லாம் ஆடுபவர்கள் அல்ல நாங்கள்.

பாண்டியராஜன் – சிறப்பாக செயல்படும் தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை.

அதிமுகவினரின் இவ்வாறான விமர்சனங்கள் மூலம், பாஜகவை, அதிமுக தன்னிச்சையாக எதிர்க்க ஆரம்பித்து இருப்பது தெரிகிறது. இருப்பினும், ‘பாஜகவுக்கு ஜால்ரா போடும் கட்சி அதிமுக’ என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவதை நிறுத்தவில்லை.

இது ஒருபுறமிருக்க, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காமல் பாஜக துரோகம் இழைத்துவிட்டது என மத்திய அரசை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து அவர், “தமிழகத்தில் பாஜக நடத்தும் நாடகம் போல், ஆந்திராவில் நடத்த முடியவில்லை” என்று தமிழகத்தையும் இப்பிரச்சனையில் இழுத்து விமர்சித்தார்.

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காமல் பாஜக செயல்படுவதற்கும், இதற்கு தமிழகத்தை குறிப்பிட்டு சந்திரபாபு நாயுடு விமர்சித்து இருப்பதற்கும் ஒரு முக்கிய காரணமுள்ளது.

அதாவது, தமிழகத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மூலம் பாஜக காலூன்ற முயற்சித்து வருவதாக, அனுதினமும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாண் மூலம், பாஜக காலூன்ற முயற்சிக்கிறது என்பதை குறிக்கும் விதமாகவே, ‘தமிழகத்தில் பாஜக நடத்தும் நாடகம் போல், ஆந்திராவில் நடத்த முடியவில்லை’ என்று சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

திரைத் துறையைத் தாண்டி, ரசிகர்களிடையே ‘அஜித்குமார்’ மீது எப்படி ஒரு ‘வெறித் தனம்’ இருக்கிறதோ, அதே போன்றவொரு ரசிகர் படை கொண்ட நடிகர் தான் பவன் கல்யாண். இவரது படங்கள் எவ்வளவு தான் மோசமாக அடி வாங்கினாலும், அடுத்தப் படம் ரிலீசாகும் போது, 10 மடங்கு எதிர்பார்ப்பு எகிறும்.

இப்போது அனைவரும் ரஜினிகாந்த் 1996ல் அரசியலுக்கு வந்திருந்தால் ஆட்சியை பிடித்திருப்பார் என்று சொல்கிறார்கள். அதில் உண்மை உள்ளதும் கூட!.  ஏன் ரஜினி அப்போது அரசியலுக்கு வரவில்லை என்பது அவருக்கே வெளிச்சம். ஆனால், பவன் கல்யாண் அதை சரியாக செய்ய நினைக்கிறார்.

கடந்த 2014ம் ஆண்டு ‘ஜன சேனா’ எனும் கட்சியை தொடங்கிய பவன் கல்யாண் வரும் சட்டசபை தேர்தலில் ஆட்சிக் கட்டிலில் அமர உறுதியாக இருப்பதாக ஆந்திர வட்டாரங்கள் கூறுகின்றன. இதனை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 14ம் தேதி, ஜனசேனா நிறுவப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆனதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பவன்கல்யான், “மத்தியில் பா.ஜ.வுடன் கூட்டணிவைத்த தெலுங்குதேசம் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட நடவடிக்கை எடுக்காமல் ஏமாற்றிவிட்டது. ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் உண்ணாவிரதம் இருப்பேன். முதல்வர் சந்திரபாபு நாயுடு மகன், தந்தை பெயரை சொல்லி பெருமளவு ஊழல் செய்து வருகிறார். 2019-ல் ஆந்திராவிற்கு நடக்க உள்ள பார்லி. மற்றும் சட்டசபை தேர்தலில் ஜனசேனா மாற்றத்தை ஏற்படுத்தும் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, “ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் என்மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி இருக்கிறார். இந்த குற்றசாட்டுகளையும், பேச்சையும், அவர் பேசவில்லை. டெல்லியில் இருந்து பாஜக எழுதிக்கொடுத்த உரையைத்தான் அவர் படித்து இருக்கிறார். பவன் கல்யாணின் அனைத்து குற்றச்சாட்டுகளின் பின்புலத்தில், பாஜக இருக்கிறது.

தமிழகத்தில் பாஜக நடத்தும் நாடகம் போல் ஆந்திராவில் நடத்த நினைக்கிறது. அதுபோன்ற நாடகத்தை ஆந்திராவில் நடத்த முடியவில்லை. என் மீதும் என் மகன் மீதும் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை. இதில் சதி கலந்து இருக்கிறது. மக்கள் இதை புரிந்து கொள்வார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த சதிக்குள் பவன் கல்யாண் சிக்கிவிட்டார்” என்று தெரிவித்து இருக்கிறார்.

எது எப்படியோ, 46 வயதான பவன் கல்யாண், இப்போதுள்ள தனது சினிமா மார்க்கெட்டின் உச்சத்தைப் பயன்படுத்தி, ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என உறுதியாக இருப்பதாகவே நமக்கு தகவல். அது பாஜகவின் ஆதரவுடன் இருந்தாலும் சரி… இல்லாவிட்டாலும் சரி… என்பது நமக்கு கிடைத்த கூடுதல் தகவல்!.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close