கோவா மாநிலத்தில் உள்ள கடற்கரையில், மது அருந்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேவைப்பட்டால் அவர்கள் கைது கூட செய்யப்படலாம் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.
கோவாவில் பாஜகவை சேர்ந்த மனோகர் பரிக்கர் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அம்மாநில கடற்கரையில் மது அருந்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில சுற்றுலா துறை அமைச்சர் மனோகர் அஜ்கோங்கர் (Manohar Ajgaonkar) எச்சரித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், “கடற்கரை தூய்மையாக இருக்க வேண்டும். அங்கு எவ்விதமான சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. அங்கு மது அருந்துவது தடை செய்யப்படுகிறது. மீறி மது அருந்தினால் அவர்கள் கைது கூட செய்யப்படலாம்.”, என கூறினார்.
மேலும், ஏற்கனவே கடற்கரையில் மது அருந்தியதாக சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். “சுற்றுலா வணிக சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா துறை பாதுகாவலர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், போதைப்பொருட்கள் கோவாவில் நுழைவதை தடுக்கும் வகையிலும் அவர்கள் கண்காணிக்க வேண்டும். சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது”, என அமைச்சர் கூறினார்.