வெளியானது ரூ.200, ரூ.50 நோட்டுகள்: பணம் எடுக்க வரிசை கட்டிய பொதுமக்கள்

புதிய ரூ.200 மற்றும் ரூ.50 நோட்டுகளை டெல்லி ரிசர்வ் வங்கி வாசலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் பெற்றுச் சென்றனர்.

புதிய ரூ.200 மற்றும் ரூ.50 நோட்டுகளை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட நிலையில், நீண்ட வரிசையில் காத்திருந்து அந்த மதிப்புடைய நோட்டுகளை பொதுமக்கள் பெற்றுச் சென்றனர்.

பண மதிப்பிழக்க நடவடிக்கைக்கு பின்னர், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது. ஆனால், அதிக மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டதால் சில்லறைத் தட்டுப்பாடு நிலவியது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

இதனிடையே, புதிய ரூ.200 நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் எனவும், அதனை அச்சிடுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாவும் ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. மேலும், புதிய ரூ.200 அறிமுகப்படுத்தும் முடிவு மத்திய நிதியமைச்சகத்துடன் கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், புதிய ரூ.200 நோட்டின் மாதிரியை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது. அத்துடன், புதிய ரூ.200 நோட்டுகள் நாளை (இன்று) முதல் புழக்கத்துக்கு வரும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

அதன்படி, புதிய ரூ.200 நோட்டுகளை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டது. அதேபோல், புதிய ரூ.50 நோட்டுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, புதிய ரூ.200 மற்றும் ரூ.50 நோட்டுகளை டெல்லி ரிசர்வ் வங்கி வாசலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் பெற்றுச் சென்றனர்.

கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என மத்திய அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று திடீரென அதிரடியாக அறிவித்தது. தொலைக்காட்சி மூலம் அன்றைய தினம் இரவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஒரு சாரார் புகழ்ந்தாலும், பல்வேறு தரப்பினர் தங்களது கடும் எதிர்ப்பை இன்றளவும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close