இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும்...

மே 1 முதல் புதுச்சேரி உள்ளிட்ட 5 நகரங்களில் மட்டும், இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகின்றது.

இங்கு இல்லீங்க…. புதுச்சேரியில்… ஆம்! தினம் பெட்ரோல், டீசலின் விலையை நிர்ணயம் செய்யக்கூடிய புதிய நடைமுறை இன்று (மே 1) முதல் புதுச்சேரியில் அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.03 ரூபாய் குறைந்து 66.05 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 19 பைசா குறைந்து 58.70 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

மேலும் இந்த புதிய நடைமுறை குறித்து எண்ணெய் நிறுவனங்கள் கூறிய போது, மே 1 முதல் புதுச்சேரி உள்ளிட்ட 5 நகரங்களில் மட்டும், இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகின்றது. எனவே பரிசோதனை முறையில் செயல்படுத்தப்படும் இந்த புதிய முயற்சியின் தாக்கங்கள் கருத்தில் கொள்ளப்படும். பின்பு அது அறிக்கைகளாக தயாரிக்கப்பட்டு, மத்திய பெட்ரோலியத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து, மக்கள் மத்தியில் இந்த திட்டம் பெறும் வரவேற்பைத் தொடர்ந்து, இது நாடு முழுமைக்கும் அமல்படுத்தப்படும் என்றன.

இத்திட்டத்தின்படி ஒவ்வொரு நாளும் மாறக்கூடிய பெட்ரோல், டீசல் விலை, அதிகபட்சம் பத்து பைசாக்குள் தான் இருக்கும் என கூறப்படுகிறது.

அதேசமயம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் மாற்றத்தைப் பொறுத்து, ஒவ்வொரு மாதமும் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அறிவித்து வருகின்றன. அதன்படி, இன்று  பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 44 காசுகளும் உயர்த்தி, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த விலையுயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

×Close
×Close