மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதையடுத்து அங்கு பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பாஜகவின் தேர்தல் பரப்புரைகளில் உரையாற்றும்போது முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கிண்டல் செய்ததாகவும், பெண்களை அவமதித்தாகவும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ஒரு செய்தியாளர் சந்திப்பில் டி.எம்.சி மூத்த தலைவரும் மாநில அமைச்சருமான சசி பஞ்சா கூறுகையில், இன்று நாட்டின் பிரதமரும் உள்துறை அமைச்சரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து பேசவில்லை பிரதம மந்திரி பெண்களை வெறுக்ககூடிய நகைச்சுவையான தொனியில் பேசுகிறார். இந்த வகையாக பிரதமர் உரையாற்றுவது துரதிர்ஷடவசமானது என்று கூறினார்.
மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் டி.எம்.சியின் பெண் தலைவர்கள், ஜூன் மாலியா மற்றும் அனன்யா சக்ரபோர்த்தி கூறுகையில், அவர் பிரதமர், ஆனால் அவரது உரைகளில் அவர் ’தீதி ஓ தீதி’ என்று சொல்லும் தொனியைப் பாருங்கள். இது சரியா? ஒரு முதல்வரைப் பற்றி ஒரு பிரதமர் இவ்வாறு பேசமுடியுமா? இதனால் பிரதமர் பெண்களை வெறுப்பவர், துன்புறுத்துபவர் என்று அழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், என்றனர்.
மேலும், மாலியா செய்தியாளர்களிடம், இது மம்தா பானர்ஜிக்கு மட்டும் அவமானமல்ல, வங்காள பெண்கள் அனைவருக்கும் அவமானம். இது பெண்மைக்கே அவமானம். கடந்த 25 ஆண்டுகளாக மம்தா எம்.பி யாகவும் அமைச்சராகவும் இருந்து வருகிறார். இன்று வரை எந்த பிரதமரும் தற்போதைய பிரதமரைப் போல அவமதிக்கவில்லை. இது பாஜகவின் கீழான எண்ணத்தை காட்டுகிறது என்றார்.
சக்ரபோர்த்தி கூறுகையில், வங்காளத்தின் பெரிய தலைவரை அவமதிக்கும் விளையாட்டை பாஜக தொடங்கியுள்ளது. இதற்கு வங்காள மக்கள் தேர்தலில் தகுந்த பதிலளிப்பார்கள். குஜராத் அரசு மாநில சட்டசபையில் தினமும் இரண்டு கொலைகள் நான்கு கற்பழிப்புகள் மற்றும் ஆறு கடத்தல்கள் மாநிலத்தில் நடப்பதாக தெரிவித்துள்ளது.
குஜராத்தின் அகமதாபாத் கற்பழிப்பு தலைநகரமா? என்று சந்தேகம் வருகிறது. அதனால், ஒருபோதும் வங்காளத்தை குஜராத்தாக மாற விட மாட்டோம் என்றும் கூறினார்.
இவ்வாறான டி.எம்.சியின் குற்றசாட்டுகளுக்கு பதிலளித்த பாஜக மகிளா மோர்ச்சா மாநிலத் தலைவர் அக்னிமித்ரா பால், எங்கள் மதிப்பிற்குரிய முதல்வர், பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் நட்டாவை பற்றி எவ்வாறு பேசுகிறார் என்பதை பற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil