இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு ஜப்பான். இந்தியாவின் புல்லட் ரயில் திட்டத்தில் ஜப்பான் பிரதமர் தனிப்பட்ட ஆர்வம் கொண்டிருந்தார் என புல்லட் ரயில் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி புகழாரம் சூடியுள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் - மகாராஷ்டிர மாநிலம் மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, பிரதமர் மோடி ஆகியோர் இணைந்து இத் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். மொத்தம் 5 ஆண்டுகளில் இத்திட்டத்தை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.1,10,000 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்காக, ஜப்பானிடம் இருந்து 0.1 சதவீத வட்டியில் ரூ.88,000 கோடி கடனுதவியை இந்தியா பெறுகிறது. மொத்தம் 508 கி.மீ., துாரத்துக்கு இயக்கப்பட உள்ள இந்த புல்லட் ரயில், மணிக்கு, 320 கி.மீ., வேகத்தில் செல்லும். இந்த வேகம் மணிக்கு, 350 கி.மீ., வரை பின்வரும் நாட்களில் அதிகரிக்கப்படும்.
இத் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டி, ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, பிரதமர் மோடி ஆகியோர் பணிகளை தொடங்கி வைத்தனர். இந்த விழா ஆமதாபாத்தில் நடைபெற்றது. அதில், ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, புல்லட் ரயில் திட்டம், குஜராத், மகாராஷ்டிரா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியா வளர்ச்சி பெற உதவும். ஜப்பான் மிகச்சிறந்த நாடு, இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு. அந்நாட்டுக்கு இந்திய மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். புல்லட் ரயில் சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் செயல்படுத்தப்படும்.
புல்லட் ரயில் புது இந்தியாவின் ஒரு அங்கம்.புதிய இந்தியாவின் எதிர்கால கூட்டணியில் ஜப்பானுக்கு நிச்சயம் இடம் உண்டு. இந்தியாவின் புல்லட் ரயில் திட்டத்தில் ஜப்பான் பிரதமர் தனிப்பட்ட ஆர்வம் கொண்டிருந்தார். உற்பத்தி துறையின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டே இத் திட்டம் துவக்கப்பட்டது என்றார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/09/PM-Modi-Abe1.jpg)
அதேபோல், விழாவில் பேசிய ஜப்பான் பிரதமர் அபே, ஜப்பான் புல்லட் ரயில் திட்டத்திற்கான பொன் விழா ஆண்டு இது. இந்த ஆண்டில் இந்திய புல்லட் ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா - ஜப்பான் நட்புறவின் அடையாளம் புல்லட் ரயில். இந்தியாவும், ஜப்பானும் இணைந்து செயல்பட்டால் முடியாதது ஒன்றுமில்லை. பிரதமர் மோடி சிறந்த தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர். புது இந்தியா திட்டத்திற்கு ஜப்பான் ஒத்துழைப்பு வழங்கும். "மேக் இன் இந்தியா" திட்டத்திற்கு ஜப்பான் தனது பங்களிப்பை தரும். நான் இந்தியாவை விரும்புகிறேன். இந்தியாவுக்காக என்னால் முடிந்தவற்றை செய்வேன். தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் ஜப்பான் இணைந்து செயல்படும் என்றார்.