அசாம் மாநிலம் கௌஹாத்தியில் உள்ள சாதியா எனும் இடத்திலிருந்து அருணாச்சலப்பிரதேசத்தின் இட்டா நகரிலுள்ள தோலா இடையே பிரம்மபுத்திரா, லோஹித் ஆறுகளின் குறுக்கே சுமார் 9.2 கி.மீ தொலைவில் கட்டப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின், அந்த பாலத்திலேயே சிறிது தூரம் நடந்து சென்று அவர் பார்வையிட்டார்.
இந்தப் பாலம் பயன்பாட்டுக்கு வருவதன்மூலம் அசாம், அருணாச்சலப்பிரதேச மாநிலங்கள் இடையேயான போக்குவரத்து நேரம் 4 மணி நேரமாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பாலம் இரு மாநிலங்களுக்கிடையே நடைபெறும் வர்த்தகப் போக்குவரத்துக்குப் பயனுள்ளதாக அமையும் எனவும் கூறப்பட்டுள்ளது. ராணுவ டேங்க்குகளையும் தாங்கும் சக்தியுடன் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் எல்லைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளதால், பாதுகாப்புரீதியாகவும் இந்தப் பாலம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னதாக, இந்த பாலம் குறித்து பிரதமர் மோடி கூறுகையில், "இது நம் நாட்டின் மிக முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகும். 10,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த 9.15 கி.மீ. நீளம் கொண்ட பாலம், அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் இடையேயான, 165 கி.மீ தூரம் கொண்ட ஆறு மணி நேர பயணத்தை, ஒரு மணி நேரமாக குறைக்கும்" என்றார்.
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் முடிவடையும் நிலையில், மோடி இந்த பாலத்தை திறந்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.