கொச்சியில் எகிறும் மக்கள் தொகை; மெட்ரோ ரயில் சேவையை திறந்து வைத்த பிரதமர் மோடி உரை!

கேரளாவின் கொச்சி நகரில் 25 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவைக்கான வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக, பலரிவட்டம் மற்றும் அலுவா ஆகிய பகுதிகள் இடையே, 13 கி.மீ தூரத்துக்கான பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து, மெட்ரோ ரயிலின் வெள்ளோட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல் முறையாக கேரளாவில் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் துவங்கப்படுகிறது.

இந்த ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கொச்சி வந்தார். பின்னர், மெட்ரோ ரயில் நிலையத்தை திறந்து வைத்த மோடி, மெட்ரோ ரயில் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மெட்ரோ ரயிலில் பயணமும் மேற்கொண்டார். பிரதமர் மோடியுடன் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் பயணம் செய்தனர்.

பின்னர் பேசிய பிரதமர், “கொச்சி நகரில் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்து வருகிறது. 2021-ல் 23 லட்சமாக இங்கு மக்கள் தொகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நகர்ப்புற உள்கட்டமைப்புகளில் அதிகரித்துவரும் அழுத்தத்தை குறைப்பதற்கு இதுபோன்ற விரைவான போக்குவரத்து அமைப்பு அவசியம். இது கொச்சி பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும்” என்றார்.

ஆனால், இதனை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ, “இது அவர்களுடைய திட்டம் போல் கொண்டாடுகிறார்கள். இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதே மன்மோகன் சிங் தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

×Close
×Close