”கேதர்நாத் சீரமைப்பு பணிகளுக்கு உதவ தயாராக இருந்தேன், ஆனால், காங்கிரஸ் அதை ஏற்கவில்லை”: மோடி குற்றச்சாட்டு

”கேதர்நாத் கோவிலின் மறுசீரமைப்பு பணிகளுக்கு தான் உதவ தயாராக உள்ளதாக கூறியதை, அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசாங்கம் ஏற்க தயாராகவில்லை .

கடந்த 2013-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்த கேதர்நாத் கோவிலின் மறுசீரமைப்பு பணிகளுக்கு தான் உதவ தயாராக உள்ளதாக கூறியதை, அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசாங்கம் ஏற்க தயாராகவில்லை என பிரதமர் நரேந்திரமோடி குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற வழிபாட்டு தலமான கேதர்நாத் கோவிலில் வெள்ளிக்கிழமை வழிபட்டார். இதையடுத்து, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு மோடி பேசியதாவது, “கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளம் எல்லோருக்கும் சோகத்தை அளித்தது. அந்த சமயத்தில் நான் பிரதமராக இல்லை. குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தேன். வெள்ளம் ஏற்பட்டபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்ய நான் முன்வந்தேன்.”, என கூறினார்.

மேலும், “அந்த சமயத்தில் உத்தரகாண்ட் முதலமைச்சராக இருந்த விஜய் பகுகுணா மற்றும் அதிகாரிகளை சந்தித்து, குஜராத் மாநில அரசு கேதர்நாத்தை சீரமைக்கும் என தெரிவித்தேன். அப்போது, முதலமைச்சர் அதற்கு ஒப்புக்கொண்டார். அதை ஊடகங்களுக்கு தெரிவித்தேன். ஆனால், இந்த செய்தி வெளியானதும் டெல்லியில் உள்ளவர்கள் (அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு) பயந்தார்கள். உடனேயே, மத்திய அரசே கேதர்நாத்தை சீரமைக்கும் என அறிவிக்கும்படி மாநில அரசை கட்டாயப்படுத்தினர். இதனால், நான் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினேன். ஆனால், கேதர்நாத்தை சீரமைக்கும் பணியை கடவுள் என்னிடமே வழங்க முடிவு செய்தார்”, என கூறினார்.

கடந்த 2013-ஆம் ஆண்டில் வெள்ளத்தால் சேதமடைந்த கேதர்நாத்தை சீரமைக்க, அச்சமயத்தில் குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி, தன் மாநில அர்சின் சார்பாக ரூ.2 கோடி மட்டுமல்லாமல், ரூ.3 கோடியை கூடுதலாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close