பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை ஆற்றிய உரையின் போது, ஏப்ரல் - ஜூன் மாத காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் சரிவடைந்து உள்ளது. அதை சரிசெய்யும் பொறுப்புடன் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
‘கடந்த மூன்று வருடங்களில் 7.5 சதவிகித வளர்ச்சியை அடைந்த பொருளாதாரம், ஏப்ரல்-ஜூன் மாத காலாண்டில் சரிவடைந்துவிட்டது’ என டெல்லியில் உள்ள நிர்வாக செயலாளர்கள் இன்ஸ்டிடியூட்டின் கோல்டன் ஜூப்ளி ஆண்டின் திறப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் மோடி தனது உரையில், "மத்தியல் பாஜக ஆட்சி அமைத்த பின்னர், தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. ஒரேயொரு காலாண்டில் பொருளாதார வளர்ச்சி கீழ் சென்றிருப்பது, அவநம்பிக்கைவாதிகளை பூஸ்ட் செய்துள்ளது.
2016ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதிக்கு முன்னால், 12 சதவிகிதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் 9 சதவிகிதமாக குறைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.7 சதவிகிதம் அல்லது எட்டு சதவிகிதத்திற்கும் கீழே குறைந்தது. இதனால், உயர் பணவீக்கம் மற்றும் நிதி பற்றாக்குறை போன்ற சிரமங்களை இந்த தேசம் சந்தித்தது.
இரட்டை இலக்க பணவீக்கம் தற்போது மூன்று சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. கணக்கு பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை ஆகியவை 2.5 மற்றும் 3.5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதார அடிப்படையானது வலுவாகவும், சீர்திருத்த செயல்முறை மற்றும் நிதி நிலைத்தன்மையை மனதில் வைத்தும் அரசு தொடர்ந்து செயல்படும்’ என்றும் மோடி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மோடி, "ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு முடிவுகள் போன்ற அரசாங்கத்தின் முடிவுகள் நாட்டின் வளர்ச்சியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
ஜிஎஸ்டியில் உள்ள எந்த பிரச்னையையும் சுலபமாக மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. வாகனங்கள் விற்பனை, விமானம் மற்றும் செல்போன் பயன்பாடு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது" என்றும் தெரிவித்துள்ளார்.