முத்தலாக் என்கிற முறையில் விவாகரத்து பெறும் பழக்கம் இஸ்லாமியர்கள் மத்தியில் நடைமுறையில் இருந்து வந்தது. ஒரே நேரத்தில் கடிதம் மூலமாகவோ, இ மெயில் மூலமாகவோ, எஸ்.எம்.எஸ். மூலமாகவோகூட மூன்று முறை ‘தலாக்’ கூறி சில இடங்களில் இந்த விவாகரத்து அமுல்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, இஸ்லாமியப் பெண்களின் திருமண பாதுகாப்பு உரிமையை காக்கும் வகையில் மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டுவந்தது. இந்த தடைச் சட்டம் கடந்த 28ம் தேதி லோக்சபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இஸ்லாமியர்களின் பழங்கால முறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் போரிட்டு வந்த இஸ்லாமியப் பெண்கள் மத்திய அரசின் முத்தலாக் தடை சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று 85-வது சிவகிரி பக்தர்கள் கொண்டாட்டங்கள் தொடக்க விழாவில் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பேசிய பிரதமர் மோடி, "இத்தனை ஆண்டு காலமாக முத்தலாக் காரணமாக கடும் துயரங்களை சந்தித்து வந்த இஸ்லாமிய பெண்களுக்கு, தற்போது தான் புதிய வழி பிறந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.