இந்தியா – சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு விவகாரத்தில் இன்னும் நெருக்கமான தொடர்புகள் தேவை என பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் இடையேயான பேச்சுவார்த்தையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஜியாமென் நகரில் கடந்த 3-ம் தேதி தொடங்கி இன்று வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே, பிரதமர் மோடி சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் இடையேயான இரு தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. டோக்லாம் பதற்றத்துக்கு பின்னர், இரு நாட்டு தலைவர்களிடையே நடைபெற்ற முதல் இரு தரப்பு சந்திப்பு இதுவாகும்.
இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் நெருக்கமான தொடர்புகள் தேவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது, “கருத்து வேறுபாடுகளை களைவோம், அதற்கு இடம் கொடுக்க வேண்டாம்” என இரு நாடுகளும்ஏற்கனவே ஒப்புக் கொண்டதை இரு நாட்டு தலைவர்களும் மீண்டும் உறுதிபடுத்தினர்.
இரு நாட்டுத் தலைவர்களிடையே பேசப்பட்ட அம்சங்கள் குறித்த மேற்கண்ட தகவல்களை பிரதமர் மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவல் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா – சீனா இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் அமைந்த பேச்சுவார்த்தை இது என குறிப்பிட்ட ஜெய்சங்கர், இரு நாட்டு உறவை முன்னோக்கி எடுத்துச் செல்லும் பேச்சுவார்த்தை தான் இது, பின்னோக்கி எடுத்துச் செல்வதல்ல எனவும் தெரிவித்தார்.
முன்னதாக, இரண்டாவது நாளான நேற்றைய கூட்டத்துக்கு பின்னர், ஜியாமென் பிரகடனம் வெளியிடப்பட்டது. பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் வெளியிட்ட 43 பக்க கூட்டு பிரகடனத்தில் பயங்கரவாதம் பற்றி கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில், பயங்கரவாதம் குறித்த கருத்துகள் 17 முறை இடம் பெற்றிருந்தது. முதன் முறையாக பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத குழுக்களின் பெயர்களும் அதில் இடம் பெற்றிருந்தன. கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் போது, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத குழுக்கள் குறித்த பிரச்சினையை இந்தியா எழுப்ப சீனா அனுமதிக்கவில்லை. ஆனால், இந்த முறை அவை இடம்பெற்றுள்ளது இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இந்தியா – சீனா இடையே, டோக்லாம் பகுதியில் சுமார் 73 நாட்கள் நீடித்த பதற்றம் கடந்த மாதம் 28-ம் தேதியன்று இரு நாட்டுப் படைகளையும் திரும்பப் பெற ஒப்புக் கொள்ளப்பட்டதையடுத்து தணிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.