வாங்களேன் ஜாலியா ஒரு ரைடு போகலாம் என்றதும் பிரதமர் மோடி உங்களை சைக்கிள் ரைடுக்கு கூப்பிடுகிறார் என தப்பாக நினைத்து விட வேண்டாம். ரூபாய் மதிப்பிழக்க நடவடிக்கை போன்று இனிமேல் கார், பைக் போன்ற வாகனங்கள் மதிப்பிழந்து விட்டது, இனிமேல் சைக்கிள் பயணம் தான் என்றும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இது பிரதமர் மோடி நெதர்லாந்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம். அருகில் இருப்பவர் அந்நாட்டு பிரதமர்.
நம்மூரில் பிரதமர் ஒரு இடத்துக்கு செல்கிறார் என்றால் அவருக்கு முன்பாகவே அவரது பாதுகாப்பு குழுவினர் சென்று விடுவர். பாதுகாப்பு ஒத்திகையெல்லாம் பார்த்து முடித்து, பிரதமர் வரும் போது அவருக்கு முன் செல்லும் வாகனங்கள், பின் செல்லும் வாகனங்கள் என வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் புடை சூழ செல்வார்.
பிரதமர் மட்டுமல்ல அமைச்சர் பெரு மக்களும் அப்படித்தான். போக்குவரத்தையும் முடக்கி விடுவர். தற்போது தான் சுழலும் சிவப்பு விளக்குகளை எரியவிட்டுக் கொண்டு செல்லும் கலாசாரத்துக்கு ஓரளவு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நெதர்லாந்து நாட்டில் அப்படியல்ல பிரதமர் உள்பட அமைச்சர்களும் சைக்கிளில் தான் அலுவலகம் செல்வர். இது குறித்த புகைப்படங்களையும் நாம் இணையதளங்களில் பார்த்திருப்போம். அங்கு சைக்கிள் தான் பிரதான வாகனம், கார்களை விட அங்கு அதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்நாட்டில் பெரும்பாலான மக்கள் சைக்கிளில் செல்லும் வழக்கம் கொண்டவர்கள் தான்.
இந்நிலையில், மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி தற்போது தாயகம் திரும்பியுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் இறுதி நாடாக நெதர்லாந்து சென்ற அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் அந்நாட்டின் பிரதான வாகனமான சைக்கிளும் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து சைக்கிளுடன் தாயகம் திரும்பியுள்ள பிரதமர், அந்நாட்டு பிரதமர் மார்க் ருட்டேவுக்கு சைக்கிள் பரிசளித்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல், சிறப்பான உபசரிப்பு அளித்த அந்நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்ததுடன், நெதர்லாந்து பயணம் மறக்க முடியாத, பயனளிக்கும் வகையில் அமைந்த ஓர் இனிமையான பயணம் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.