மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் விளையாடி வரும் இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பதினொன்றாவது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதலாவது அரை இறுதியில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. அந்த போட்டியில், தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து முன்னேறியது. இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் இந்திய - இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன. கடந்த 2005-ஆம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்து இருந்தது. அதற்கடுத்து, இரண்டாவது முறையாக தற்போது இறுதிப் போட்டிக்குள் இந்திய மகளிர் அணி நுழைந்துள்ளதால் பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது
கடந்த 1983-ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது. அந்த போட்டி நடைபெற்ற அதே லார்ட்ஸ் மைதானத்தில் தான் தற்போதைய போட்டியும் நடைபெற்று வருகிறது என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் விளையாடி வரும் இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்."மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமது வீராங்கனைகள் விளையாடி வரும் நிலையில், 125 கோடி மக்களுடன் இணைந்து அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
மேலும், தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் ஒவ்வொரு வீராங்கனைக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கேப்டன் மிதாலி ராஜின் அணுகுமுறை கண்டிப்பாக முழு அணிக்கும் உதவும். ஹர்மன்ப்ரீத் கவுரின் அரை இறுதி இன்னிங்க்ஸ் நினைவில் இருந்து நீங்காதவை என அனைத்து வீராங்கனைகளுக்கும் பிரதமர் மோடி தனித்தனியே வாழ்த்து தெரிவித்துள்ளார்.