/indian-express-tamil/media/media_files/2025/10/17/rangasamy-2025-10-17-10-15-15.jpg)
நாடு முழுவதும் வரும் 20-ஆம் தேதி தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இந்த தொகுப்பில் சர்க்கரை-2 கிலோ, சூரியகாந்தி எண்ணெய் 2 லிட்டர், கடலை பருப்பு 1 கிலோ, ரவை, மைதா ஆகியவை வழங்கப்படுகிறது.
இதன் மதிப்பு ரூ.585 ஆகும். இவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. இந்தநிலையில் பரிசு தொகுப்புகள் வழங்கும் தொடக்க விழா இந்திராநகர் தொகுதிக்கு உட்பட்ட திலாஸ்பேட்டை காளிகோவில் அருகில் உள்ள ரேஷன் கடையில் நடந்தது. விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு ரேஷன்கார்டு தாரர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கி தொகுப்பை தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர் திருமுருகன் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அறிவித்த திட்டங்கள் குறித்த நேரத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகைக்காக அரசு அறிவித்த தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் இலவச அரசி மீண்டும் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரமும், கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.5 அயிரமும், 60 வயதுக்கு மேல் உள்ளவகளுக்கு ரூ.6 ஆயிரமும் அவரவர் வங்கி கணகில் செலுத்தப்படும். ஆதிதிராவிட மக்களுக்கான இலவச துணிக்கான பணமும் விரைவில் வழங்கப்படும். அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு, நிறுவனத்தின் லாபத்திற்கு ஏற்ற வகையில்
தீபாவளி போனஸ் வழங்கப்படும்.
மஞ்சள் ரேஷன்கார்டு வைத்துள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுவை அரசு தேக்கமின்றி செயல்பட வேண்டும். மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். புதுச்சேரியில் எந்த முடிவு எடுத்தாலும் இறுதி முடிவு கோப்பு ஆளுநரிடம் தான் செல்கிறது. அப்போது மாறுபட்ட கருத்து வரும்.
இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்பதால், மாநில அந்தஸ்து கேட்கிறோம். நஷ்டத்தில் பொதுத்துறை நிறுவனங்கள், பாசிக் நிறுவனத்தில் சரியாக பணிகள் நடக்கவில்லை. துறையின் அமைச்சர் நடவடிக்கை எடுத்தாலும், அங்குள்ள ஊழியர்கள் பணியை செய்யவில்லை. சில சங்கங்கள் கூறும் கருத்தை கேட்டு ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால், பாசிக் நிறுவத்தை நடத்த முடியவில்லை.
பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் அரசு கொடுக்கும் நிதியை பயன்படுத்தி, லாபத்தில் இயங்க, வளர வேண்டும். அப்படி இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தில் இயங்கும் போது, அந்த நிறுவனங்களை நடத்த முடியாமல் சில நிறுவனங்கள் மூடப்படும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு அவர்
கூறினார். மேலும், புதுச்சேரி மாநில நிர்வாகியாக ஆளுநர் உள்ளார். எனவே அரசின் திட்டங்களில் முதலமைச்சருடன், கவர்னரின் புகைப்படமும் இடம்பெறுவது வழக்கம்.
இந்த நிலையில், தீபாவளி பரிசு தொகுப்பு அடங்கிய பையில் ஆளுநர் கைலாஷ்நாதன் புகைப்படம் இடம்பெறவில்லை. அதில், பிரதமர் மோடி, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரின் புகைப்படங்கள் மட்டும் இடம் பெற்றுள்ளது. அரசின் சில கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் காலம் கடத்தி வரும் சூழலில் முதலமைச்சருக்கும், ஆளுநருக்கும் இடையே சில நேரங்களில் மோதல் போக்கு ஏற்படுகிறது. இந்த சூழலில் தற்போது தீபாவள பரிசு தொகுப்பில் ஆளுநர் புகைப்படம் இல்லாதது சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.