"தேர்தல்களில் தலித் வேட்பாளர்களுக்கு பாகுபாடு காட்டாமல் மக்கள் வாக்களிக்கத் தொடங்கிவிட்டனர். எனவே, அவர்களுக்கான அரசியல் இடஒதுக்கீடை முடிவுக்குக் கொண்டுவரலாம்" என்று டாக்டர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் யோசனை கூறியுள்ளார்.
இதுகுறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "அரசியல் இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வரலாம். ஏனெனில், இப்போதெல்லாம் தலித் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதில் எந்தவித சிக்கலும் இல்லை. ஆனால் கல்வி, சேவை ஆகிய துறைகளில் இடஒதுக்கீடு முறை தொடர வேண்டும். ஏனெனில், தலித்துகள் இன்னமும் சமூகத்தில் பாகுபாட்டை எதிர்கொண்டு வருகின்றனர்.
டாக்டர் அம்பேத்கருடன் சேர்ந்த அறிவு ஜீவி வர்க்கம் அவருக்குப் பிறகும் கூட இருந்து வருகிறது. அந்த வர்க்கம் சேவைத் துறையில் பணிக்குச் சேர்ந்து இப்போது நிலைபெற்றுள்ளனர். ஆனால் இதே பிரிவினருக்கு அரசியல் ஒரு பெரிய திட்டமாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், முந்தைய தலைமுறையினர் போல் தனித்துவமான அரசியலில் ஈடுபட இவர்களுக்குத் தைரியமில்லாமல் இருந்தது. ஆனால், இப்போது நம்மிடையே இருப்பது 4-வது தலைமுறையினர். இவர்கள் தனித்துவ அரசியலை முன்னெடுத்துள்ளனர். இது ஒரு நல்ல அறிகுறி.
தலித் பிரிவினரிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தலித்துகளுக்கு எதிராக சாதி ரீதியிலான வன்முறைகள் குறைந்து தனிப்பட்ட வன்முறைகளாக மாறியுள்ளது, இது ஒரு பெரிய மாற்றமே. காலம் செல்லச் செல்ல இத்தகைய தனிப்பட்ட வன்முறைகள் கூட ஓய்ந்து விடும்.
மகாராஷ்டிரத்தில் தலித் மக்கள் தொகை 13%. இது வெற்றி வாக்குகளுக்கான சதவீதம் அல்ல. எனவே, இங்கு ஒரு தலித் தலைவர் மற்ற குழுக்களை தங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் உத்திரப் பிரதேச மாநிலத்தில் தலித் அரசியல் 24% வாக்குப்பகிர்வு கொண்டது. இது 32% ஆக அதிகரித்துள்ளது. எனவே அங்கு அது வெற்றிக்கான சதவீதமாகும்.
மாவோயிஸ்ட் இயக்கம், 1970-ஆம் ஆண்டுகளில் ஜமீன்தாரி முறைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது, இப்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் பழங்குடி மக்களைச் சுரண்டும் போக்கை எதிர்த்து வருகிறது. இயற்கை வளங்கள் நாட்டின் சொத்து என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஒரே இயக்கம் மாவோயிஸ்ட் இயக்கமே. ஆனால் வன்முறை மீது எனக்கு நம்பிக்கையில்லை” என்றார்.
தலித்துகளிடையே பிரிவினை பற்றி அவர் கூறும்போது, "மதம் மாறாத தலித்துகள் மதச்சார்புடைய அரசியலில் நம்பிக்கை வைத்துள்ளனர், இதனால் சிவசேனா, பாஜக-விற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் மதம் மாறிய (பவுத்த மதத்திற்கு) தலித்துகள் மதச்சார்பில்லாத இயக்கங்கள், அமைப்புகளுடன் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தலித்துகள் வாக்களித்ததை ஒரு பொது அளவுகோலாகக் கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.