”பிரதமர் பதவிக்கு என்னைவிட தகுதியானவர் பிரணாப் முகர்ஜிதான். அவரை பிரதமராக தேர்ந்தெடுக்காதது குறித்து, அவர் அதிருப்தி அடைவதில் நியாயம் இருக்கிறது.”, என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் புதிய புத்தகமான ’கூட்டணி ஆட்சி ஆண்டுகள்: 1996 to 2012’ அறிமுக நிகழ்ச்சி டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் பேசியதாவது, “2004-ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றபோது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்பாராத விதமாக என்னை பிரதமராக தேர்ந்தெடுத்தார். ஆனால், பிரதமர் பதவிக்கு என்னைவிட தகுதியானவர் பிரணாப் முகர்ஜிதான். தன்னை பிரதமராக தேர்ந்தெடுக்காதது குறித்து பிரணாப் அதிருப்தியடைவதில் நியாயம் இருக்கிறது. ஆனால், இதில் எனக்கு வேறு வழியில்லை என்பதும் அவருக்கு தெரியும். என்னை பிரதமராக தேர்ந்தெடுத்ததால் எங்கள் இருவருக்குள்ளும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. நாங்கள் நல்ல நட்புறவுடன் இருக்கிறோம்.”, என கூறினார்.
மேலும், பிரணாப் சிறந்த காங்கிரஸ்வாதி எனவும், கட்சியில் உள்ள அனைவரும் அவரிடம் கலந்தாலோசித்தபின்பே பிரச்சனைகளின்போது முக்கிய முடிவுகளை எடுப்பதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்தார். ”பிரணாப் முகர்ஜி விரும்பி அரசியலுக்கு வந்தவர். நான் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், நான் நிதியமைச்சராக பதவி வகிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதால் தான் நான் அரசியலுக்கு வந்தேன்”, என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரணாப் முகர்ஜி, “மன்மோகன் சிங் தலைமையிலான அரசுடன் நான் இணைய மறுத்தபோது, அரசின் செயல்பாடுகளுக்கும், மன்மோகன் சிங்குக்கு ஆதரவாகவும் நான் இணையவேண்டும் என சோனியா காந்தி கூறினார்”, என தெரிவித்தார்.
கடந்த பல வருடங்களாக பிரணாப் முகர்ஜியும், மன்மோகன் சிங்கும் நல்ல நட்புறவை பேணி காத்து வருகின்றனர். கடந்த 1982-ஆம் ஆண்டில் பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக பதவி வகித்தபோது, மன்மோகன் சிங்கை ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.