மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தானாக முன்வந்து பதிவு செய்ததன் மூலம் 'விமர்சனம் செய்யும் உரிமையை நசுக்குவதாக' முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர், டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏபி. ஷா உள்ளிட்ட 131 இந்திய குடிமக்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
சமீப காலமாக உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து எழுப்பப்பட்ட சில கவலைகளை தான் பூஷண் வெளிப்படுத்தினார் என்றும், நீதியின் நலனுக்கும், உச்சநீதிமன்றத்தின் மாண்பை பாதுகாக்கும் வகையிலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிடுமாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
"பழிவாங்கல், குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை போன்ற அச்சமின்றி ஒரு நாட்டின் உச்சநீதிமன்றம் பொது விவாதத்தை முன்னெடுத்து செல்லும் சுதந்திர அமைப்பாக இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது ட்விட்டரில் உச்ச நீதிமன்றம், முன்னாள் தலைமை நீதிபதிகள், தற்போதைய தலைமை நீதிபதி செயல்பாடுகள் குறித்து விமர்சித்திருந்தார்.
பிரசாந்த் பூஷனின் ட்விட்டர் பதிவுகள் இந்தியாவின் நீதித்துறையை கலங்கப்படுத்திவிட்டதாக உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தெரிவித்தது.
கடந்த மாதம் ஜூன் 27,29 ஆகிய நாட்களில், பிரசாந்த் பூசன் ட்விட்டரில் தெரிவித்த கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்காக தற்போது உருவெடுத்துள்ளது. 29ம் தேதி ட்வீட்டில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஹார்லி டேவிட்ஸன் CVO 2020 மாடல் பைக்கில் அமர்ந்தவாறு வந்த புகைப்படம் தொடர்பாக பிரசாந்த் பூசன் கருத்து தெரிவித்தார். 27ம் தேதி ட்வீட்டில், இந்திய ஜனநாயகம் குறித்தும் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
கூட்டறிக்கையில்,“ கடந்த சில ஆண்டுகளாக, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் அரசின் நடவடிக்கைகளை கேள்வி கேட்கும் அரசியலமைப்பு கடமைகளை செய்ய தயங்கும் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக கேள்விகள் எழுந்து வருகிறது. இந்த கேள்விகள், ஊடகங்கள், கல்வி, சிவில் சமூக அமைப்புகள், வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் போன்ற சமூகத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. சமீபத்தில், பொது முடக்கநிலையில் எண்ணற்ற புலம்பெயர்ந் தொழிலாளர்களின் நெருக்கடிகளுக்கு உரிய நேரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட தயக்கம் காட்டிய செயல் பொது விவாதத்திற்கு உட்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் லோகூர், ஷா தவிர, மூத்த வழக்கறிஞர்கள் ஆனந்த் குரோவர், சி யு சிங், கோபால் சங்கரநாராயணன், சஞ்சய் ஹெக்டே, வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, முன்னாள் முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபீபுல்லா, எழுத்தாளர் அருந்ததி ராய், ஸ்வராஜ் இந்தியா அமைப்பு நிறுவனர் யோகேந்திர யாதவ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil