பாலியல் வன்புணர்வு: 10 வயது சிறுமியின் கருவைக் கலைக்கக்கூடாது - உச்சநீதிமன்றம்

பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தற்போது 32 வாரங்கள் கர்ப்பமான சிறுமியின் கருவைக் கலைக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தற்போது 32 வாரங்கள் கர்ப்பமான சிறுமியின் கருவைக் கலைக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மருத்துவப் பரிசோதனையில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்வது, சிறுமி மற்றும் சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என தெரியவந்ததால் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது.

சண்டிகரை சேர்ந்த பத்து வயது சிறுமி அடிக்கடி வயிறு வலிப்பதாக கூறியதையடுத்து, அவருடைய பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியிடம் விசாரித்ததில், தன்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவராலேயே கடந்த ஏழு மாதங்களாக சிறுமி தொடர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அச்சிறுமியின் பெற்றோர், தன் மகளின் உடல்நிலை குழந்தை பெற்றெடுக்க ஏற்றதில்லை எனக்கூறி, கருவைக் கலைக்க உத்தரவிடுமாறு கீழமை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால், சிறுமி 32 வார கர்ப்பமாக இருப்பதால், தற்போது கருக்கலைப்பு செய்வது அச்சிறுமியின் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் என அரசு மருத்துவமனை அறிக்கை அளித்ததால், கருக்கலைப்பு செய்ய கீழமை நீதிமன்றம் அனுமதி மறுத்தது.

இதையடுத்து, கருக்கலைப்பு செய்ய உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் பெற்றோர் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, சிறுமி கருக்கலைப்பு செய்வது அவரது உடல்நலத்திற்கு ஏற்றதுதானா என சண்டிகர் உயர்நிலை மருத்துவ கல்வி மற்றும் மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. அந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவப் பரிசோதனையில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்வது சிறுமி மற்றும் சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யக்கூடாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கடந்த மே மாதம், ஹரியானாவில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பத்து வயது சிறுமியின் 21 வார கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

20 வாரங்களுக்குட்பட்ட கருவைக் கலைக்க சட்டத்தில் இடம் உண்டு. ஆனால், 20 வாரங்களைக் கடந்த சிசுவைக் கலைக்க அனுமதியில்லை. அதே சமயத்தில், அந்த தாய் உடல் அல்லது மன ரீதியாக அந்த சிசுவால் பாதிப்பு ஏற்படுமேயானால் நீதிமன்றத்தின் உரிய உத்தரவின்படி கருக்கலைப்பு செய்ய முடியும்.

×Close
×Close