நாட்டின் புதிய ஜனாதிபதி யார்? இன்று வாக்கு எண்ணிக்கை!

முதலில் பாராளுமன்ற வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளும், அதன்பிறகு அகர வரிசைப்படி, மாநிலங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும்.

தற்போதைய குடியரசுத் தலைவரப் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24-ஆம் தேதியோடு முடிவடைவதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க கடந்த திங்கட்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பீகார் மாநில முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலில் மக்களவை உறுப்பினர்கள் 543 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 233 பேர் என மொத்தம் 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இது தவிர அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4,120 பேரும் வாக்களித்தனர். 776 எம்.பி.க்கள், 4,120 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் ஓட்டுப் போட தகுதி பெற்று இருந்தனர். ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு 708 ஆகும். எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும். 99 சதவீத வாக்குகள் மொத்தமாக பதிவாகி இருந்தன.

வாக்குப்பதிவு முடிந்ததும் மாநில தலைநகரங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. 4 மேஜைகளில் 8 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் ஜனாதிபதி தேர்தல் அதிகாரியும், பாராளுமன்ற மக்களவை செயலாளருமான அனூப் மிஷ்ரா நேற்று தெரிவித்தார். முதலில் பாராளுமன்ற வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளும், அதன்பிறகு அகர வரிசைப்படி, மாநிலங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும்.

60 சதவீதத்திற்கும் மேலான ஆதரவு, தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு உள்ளதால், அவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தெரிகிறது. மாலை 5 மணி அளவில் முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அப்போது, இந்தியாவின் புதிய ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close