குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக களம் இறங்கியுள்ள மீராகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஜூலை 27-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேட்புமனு செய்தார். பல்வேறு கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ள ராம்நாத் கோவிந்த கிட்டத்தட்ட 60 சதவீத வாக்குகளை வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டார். இவருக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் தி.மு.க. உள்பட 17 கட்சிகள் ஆதரவு அளிக்கிறது.
5 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மீராகுமார், மக்களவையின் சபாநாயகராகவும் இருந்துள்ளார். இவர் ஐஏஎஸ் அதிகாரிகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக சார்பில் முன்னதாக நிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்ற நிலையில், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பத கவனிக்கத்தக்கது.
இந்நிலையில், எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்ட மீராகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள், பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங், ஹிமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து தனக்கு ஆதரவு கேட்டு மீராகுமார் 30–ம் தேதி சுற்றுப்பயணம் தொடங்க திட்டமிட்டுள்ளார். அவர் குஜராத் மாநிலத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.