வரும் டிசம்பர் மாதம் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திரமோடி அக்டோபர் மாதத்தில் மூன்றாவது முறையாக அம்மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டார்.
குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது, குஜராத் பாஜக அரசுக்கும், மத்திய அரசுக்கும் சாதாகமாக அமையும் என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர்கள் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஒய்.குரேஷி ஆகியோரும் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்தனர். மேலும், முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பா.சிதம்பரம், ”குஜராத் மாநில சட்டப்பேரவையின் தேர்தல் தேதியை பேரணியில் அறிவிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது”, எனவும், “சலுகைகள் மற்றும் இலவசங்களை அறிவித்த பின்னரே தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது”, எனவும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெருவித்திருந்தார்.
இந்நிலையில், குஜராத் மாநிலத்திற்கு இம்மாதத்தில் மூன்றாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டார். அவரை முதலமைச்சர் விஜய் ரூபானி மற்றும் துணை முதலமைச்சர் நிதின் படேல் ஆகியோர் வரவேற்றனர். பாவ்நகர் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார்.
குறிப்பாக, குஜராத்தின் காம்பே வளைகுடாவை ஒட்டியுள்ள பாவ்நகர் மாவட்டத்தின் கோகா நகரையும், பாரூச் மாவட்டத்தைச் சேர்ந்த தஹேஜ் நகரையும் இணைக்கும் ரூ.615 கோடி மதிப்பிலான நீர்வழிச் சாலைத் திட்டத்தின் முதல்கட்ட போக்குவரத்து பணியை துவங்கி வைத்தார்.
இத்திட்டம் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த மோடி, இத்திட்டம் குஜராத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும் என குறிப்பிட்டார்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் விஜய் ரூபானி, “சிறு, குறு தொழில்கள், தொழில் வளர்ச்சி, பருத்தி உற்பத்தி, பால், உப்பு உற்பத்தி உள்ளிட்டவற்றில் குஜராத் முதலிடம் வகிக்கிறது”, என கூறினார். மேலும், இத்திட்டத்தை தேர்தல் கருதியே தற்போது துவங்கி வைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு, கடந்த 3 ஆண்டு காலமாக இத்திட்டத்திற்காக அரசு கடுமையாக உழைத்தது என கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய மோடி, “கோகா-தாஹேஜ் திட்டம், ஒட்டுமொத்த நாட்டிற்கே முக்கியமானதொரு திட்டம். இந்தியாவிலேயே இத்திட்டம் முதல்முறையாக செயல்படுத்தப்படுகிறது. தெற்கு ஆசியாவிலேயே பெரியது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் குஜராத் கடற்கரையில் எந்தவித வளர்ச்சி திட்டங்களும் நிறைவேற்றப்படாமல் முந்தைய அரசுகள் தடுத்தன. ஆனால், நீங்கள் என்னை டெல்லிக்கு அனுப்பியவுடன் அவை சாத்தியமாகியிருக்கின்றன.”, என கூறினார்.
பாவ்நகர் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பின், பிரதமர் மோடி வதோரா மாவட்டத்திற்கு சென்று ரூ.1,140 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருக்கிறார்.
தேர்ந்தல் நெருங்கிவரும் நிலையில், வாக்காளர்களை கவரவே இத்தகைய திட்டங்களை மோடி தற்போது துவங்கி வைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.