இஸ்ரோ முன்னாள் தலைவர் உடுப்பி ராமச்சந்திர ராவ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் ஆதம்பூர் என்ற கிராமத்தில் கடந்த 1932 ஆண்டு பிறந்தவர் உடுப்பி ராமச்சந்திர ராவ். பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் செயற்கைக்கோள் மைய இயக்குனராக செயல்பட்ட இவர், கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் 1994-ஆம் ஆண்டு வரை சுமார் 10 ஆண்டுகாலம் இஸ்ரோவின் தலைவராக பணியாற்றியுள்ளார்.
இவரது வழிகாட்டுதலின் படி, இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா, பாஸ்கரா, ஆப்பிள், ரோகினி, இன்சாட்-1 உள்பட பல்வேறு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப ஆராய்ச்சியில் ஏராளமான ஆவணங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
கடந்த 1976-ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருதும், 2017-ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதும் வழங்கி இந்திய அரசு, ராவை கௌரவித்துள்ளது. இதுதவிர இன்னும் பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
பெங்களூருவில் வசித்து வந்த ராவ், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதய நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், உடல்நலக் கோளாறு காரணமாக உடுப்பி ராமச்சந்திர ராவ் இன்று அதிகாலையில் காலமானார்.
உடுப்பி ராமச்சந்திர ராவின் மறைவு வருத்தமடைய செய்துள்ளது என அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ராவின் பங்களிப்பை மறக்க முடியாது என்றும் புகழாரம் சூடியுள்ளார்.