/tamil-ie/media/media_files/uploads/2017/04/a32.jpg)
குறைவான செலவில் விமான சேவை வழங்கும் உடான் (Ude Desh Ka Aam Nagrik) UDAN திட்டத்தை பிரதமர் மோடி இன்று சிம்லாவில் தொடங்கிவைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம், நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் விமானத்தில் பயணம் செய்யும் வகையில், குறைந்த விமான கட்டணத்தில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருமணிநேரம் பயண தூரம் கொண்ட நகரங்களுக்கு டிக்கெட் விலை ரூ.2000ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 500 கிலோமீட்டர் தொலைவு கொண்ட நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் விமானத்தின் கட்டணம் 2000 ரூபாயாம். நாட்டின் முதல்நிலை நகரங்கள் வர்த்தக ரீதியாக வளர்ந்து வருகின்றது. அதேசமயம், இரண்டாம் நிலை நகரங்களில், வர்த்தக நடவடிக்கைகள் பின்தங்கியே உள்ளன. இந்த உடான் திட்டத்தின் மூலம், விமான சேவை விரிவுபடுத்தப்படுவதால், இரண்டாம் நிலை நகரங்களில் வர்த்தக நடவடிக்கைகள் எளிதாக அணுகும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், இத்திட்டத்தின் மூலம் இரண்டாம் நிலை நகரங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள 31 விமான நிலையங்கள் மற்றும் மிக்க குறைவாக பயன்படுத்தப்படும் 12 விமான நிலையங்கள் என மொத்தம் 70 விமான நிலையங்களை இணைக்கும் வகையில் 128 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் ஐந்து விமான நிலையங்கள் விமானங்களை இயக்க உள்ளன. ஏர் இந்தியாவின் துணை நிறுவன விமானங்கள், ஸ்பைஸ் ஜெட், ஏர் டெக்கான், ஏர் ஒடிஸா, டர்போ மெகா ஆகிய நிறுவனங்கள் தங்கள் சேவையை அளிக்க உள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஹிமாச்சல பிரதேசம், குஜராத், கர்நாடகா ஆகிய நகரங்களையும் இந்த விமான சேவை இணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பிரதமர் மோடி தனது ட்விட்டரில், 'இனி விமான சேவை, அனைவரும் பயன்படுத்தும் வகையில் மாறும்' என பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.