மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு, ‘கபி அல்விட நா ஹெக்னா’ படத்தில் இருந்து ஒரு பாடலைப் பாடி அஞ்சலி செலுத்தியுள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.
ஒரே பாட்டில் ஓவர் பாப்புலர் ஆனவர் பிரியா பிரகாஷ் வாரியர். இவருடைய முதல் படமான ‘ஒரு அடார் லவ்’ படத்தில் இடம்பெற்ற பிரியா பிரகாஷ் வாரியர் கண்ணடிக்கும் பாடலைத் தடைசெய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட கடிதம் எழுதப்பட்டது. அத்துடன், சில இடங்களில் இவர்மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு பாட்டு பாடி அஞ்சலி செலுத்தியுள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர். கரண் ஜோஹர் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கபி அல்விட நா ஹெக்னா’. அமிதாப் பச்சன், ஷாருக் கான், அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி, ப்ரீத்தி ஜிந்தா, கிரண் கெர், அர்ஜுன் ராம்பால், கஜோல், ஜான் ஆப்ரஹாம், ரிதேஷ் தேஷ்முக் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில், ‘கபி அல்விட நா ஹெக்னா’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. சோனு நிஹம், அல்கா யாக்னிக் இருவரும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். ஷங்கர் - ஈசன் - லாய் மூவரும் இசையமைத்த இந்தப் பாடலில் ஷாருக் கானும், ராணி முகர்ஜியும் தோன்றுவர்.
இந்தப் பாடலைப் பாடித்தான் தன் அஞ்சலியை செலுத்தியுள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர். அத்துடன், ‘வரலாறு உண்மையாகவே எப்போதும் ‘குட் பாய்’ சொல்வதில்லை. வரலாறு, ‘பிறகு பார்க்கலாம்’ என்றே சொல்கிறது’ எனவும் அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார். இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.