காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்திக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி. இவரது மகள் பிரியங்கா காந்தி, காய்ச்சல் காரணமாக தலைநகர் டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ரத்த மாதிரிகளை எடுத்தும் பரிசோதனை செய்தனர். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை உறுதி படுத்தியுள்ள கங்கா ராம் மருத்துவமனை மருத்துவர்கள், பிரியங்கா காந்திக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
உடல் நலக் கோளாறு காரணமாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியால் முன்பு போல் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. எனவே, அவரது மகனும், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான ராகுல்காந்தி கட்சியை வழிநடத்தி வருகிறார். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு அவராலும் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை உள்பட ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது.
இதையடுத்து, பிரியங்கா காந்தி தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் தொண்டர்களிடையே பரவலாக எழுந்துள்ளது. அதற்கு ஏற்றாற்போல், நடைபெற்று முடிந்த உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தலில் பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் களமிறக்கும் என தகவல்கள் வெளியாகின. ஆனால், முதல்வர் வேட்பாளராக பிரியங்காவை காங்கிரஸ் அறிவிக்கவில்லை.
மேலும், தனது தாய் சோனியா மற்றும் சகோதரர் ராகுல் போட்டியிட்ட தொகுதிகளில் மட்டுமே பிரசாரம் செய்து வந்த பிரியங்கா, அந்த தேர்தலில் 150 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு தீவிர பிரசாரம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதனால், காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால், தீவிர பிரசாரம் செய்ய பிரியங்கா மறுப்பு தெரிவித்தார். எனினும், அவரது பெயர் நட்சத்திர பிரசாரகர் பட்டியலில் அப்போது இடம் பெற்றது.
தொடர்ந்து சில நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்த பிரியங்கா, திடீரென தனது பிரசாரத்தை நிறுத்தினார். "நட்சத்திர பிரசாரகராக அறிவிக்கப்பட்டுள்ள பிரியங்காவை விட அழகானவர்கள் உள்ளனர்" என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் வினய்கட்டியாரின் சர்ச்சைக்குரிய கருத்து வெளியான சில நாட்களில் பிரியங்கா இனி பிரசாரம் செய்ய மாட்டார் என அறிவிக்கப்பட்டது. அதேசமயம், "இந்தியாவின் பெரும்பான்மை சமுதாயமான பெண்கள் குறித்த கட்டியாரின் கருத்து பாஜகவின் மனநிலையை காட்டுகிறது" என வினய்கட்டியாருக்கு பிரியங்கா தக்க பதிலடி கொடுத்தார்.
பிரியங்கா காந்தி தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஷயம் காங்கிரஸ் தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.