/indian-express-tamil/media/media_files/2025/10/14/puducherry-university-students-attack-independent-mla-nehru-protest-tamil-news-2025-10-14-15-57-50.jpg)
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடந்த கண்மூடித்தனமான தாக்குதலைக் கண்டித்தும், மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக் கோரியும் சுயேச்சை எம்.எல்.ஏ நேரு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடந்த கண்மூடித்தனமான தாக்குதலைக் கண்டித்தும், மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக் கோரியும், பல்கலைக்கழக மானிய குழு 2015 பாலியல் மீதான சரியான விசாரணை குழு அமைத்திட வலியுறுத்தியும் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு (எ) குப்புசாமி தலைமையில் புதுச்சேரி பொதுநல அமைப்புகள் மற்றும் காரைக்கால் மக்கள் போராட்ட குழு சார்பாக இன்று செவ்வாய்க்கிழமை அண்ணா சிலை அருகில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சுயேச்சை எம்.எல்.ஏ நேரு பேசுகையில், "புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் காரைக்கால் கிளையில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டு புதுச்சேரியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய பல்கலைகழக நிர்வாகமும், மாநில அரசும் மெத்தன போக்கை கையாண்டதால் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டு போராட்டமாக மாறிவிட்டது.
இதை மென்மையாக கையாண்டு மாணவர்களின் போராட்டத்தின் கோரிக்கைகள் என்னவென்று கேட்டுபெற்று அதற்கேற்றார்போல் நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறையானது மாணவர்களின் போராட்டத்தை அடக்கும் விதமாக அவர்கள் கையாண்ட விதம் அநாகரிகமானது. மாணவர்களை அடித்து துன்புறுத்தி இருப்பதுடன் 24 மாணவ மாணவிகளை கைது செய்து வழக்கு பதிவு செய்து இருப்பது கண்டிக்கதக்கது. இதை வண்மையாக கண்டிக்கிறோம்.
புதுச்சேரி பல்கலை. மாணவர்கள் மீது தாக்குதல்: சுயேச்சை எம்.எல்.ஏ நேரு தலைமையில் ஆர்ப்பாட்டம்!#Puducherry#protestpic.twitter.com/H5n7yQxc73
— Indian Express Tamil (@IeTamil) October 14, 2025
1. ஜனநாயக வழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
2. யு.ஜி.சி (UGC) பல்கலைகழக மானியக்குழு 2015 விதிகளின்படி பாலியல், சாதிய பாலின புகார்களை முறையாக விசாரிக்க உடனே குழு அமைக்க வேண்டும்.
3.மாணவர்களின் மீது மனிதாபிமானம் இல்லாமல் தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் காரைக்கால் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுவதாக கூறப்படும் பாலியல் குற்றசாட்டுகள் மீது புதுச்சேரி ஆளுநர் உரிய விசாரணை நடத்தி ஆணை பிறப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை புதுச்சேரி அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் நிறைவேற்றாவிட்டால் புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த பொதுநல அமைப்பினர் மற்றும் பொதுமக்களை திரட்டி தொடர்போராட்டம் நடத்தப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.