அசைவம் சாப்பிடாதவர்கள், மது அருந்தாதவர்களுக்கே தங்கப்பதக்கம் வழங்கப்படும் என, சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என மாணவ அமைப்புகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல், யோகமூர்த்தி ராஷ்ட்ரிய கீர்த்தங்கர் கோபால் சீலர் மற்றும் தியாகமூர்த்தி ஸ்ரீமதி சரஸ்வதி ராமச்சந்திர சீலர் ஆகியோரின் பெயரால், அறிவியல் பிரிவு மற்றும் அறிவியல் அல்லாத பிரிவில் திறன் வாய்ந்த மாணவர்களுக்கு தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள நோட்டீஸில், மாணவர்கள் தங்க பதக்கங்கள் பெற 10 விதிமுறைகளை விதித்துள்ளது.
அவற்றில் சில,
- பதக்கங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மது அருந்தக்கூடாது
- இந்திய கலாச்சாரத்தை மதித்து நடப்பவராக இருக்க வேண்டும்
- யோகா மற்றும் தியானம் மேற்கொள்ள வேண்டும்.
- சைவ உணவாளராக இருத்தல் கட்டாயம்
இந்த நோட்டீஸை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் விஷ்வஜீத் கதம், “இந்த விதிமுறைகள் வேடிக்கையாக உள்ளது”, என தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்ரியா சூல் கூறியதவது, “நமது பல்கலைக்கழகங்களுக்கு என்ன ஆனது? உணவை தவிர்த்துவிட்டு கல்வி மீது கவனத்தை செலுத்துங்கள்”, என கூறினார்.
இதுதவிர, இந்த விதிமுறைகளுக்கு பல்வேறு மாணவ அமைப்புகளும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.
இதனிடையே இதுகுறித்து விளக்கமளித்துள்ள பல்கலைக்கழக பதிவாளர் அர்விந்த் சாலிக்ராம், “இந்த் விருதுகள் தீர்த்தங்கர்கள் பெயரில் வழங்கப்படுவதால், அதற்கு ஏற்ற சிறந்த மாணவனுக்கே வழங்கப்பட வேண்டும் என விருது வழங்கும் அறக்கட்டளை இந்த விதிமுறைகளை புகுத்தியுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லை”, என தெரிவித்தார்.