புனேவில் பிரசவத்திற்காக ஓலா காரில் அழைத்துச் செல்லப்பட்ட பெண் காரிலேயே அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதையடுத்து, அப்பெண்ணும் குழந்தையும் 5 வருடங்களுக்கு ஓலா காரில் இலவசமாக பயணித்துக் கொள்ளலாம் என ஒலா நிறுவனம் பரிசளித்துள்ளது.
மஹராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ஈஸ்வரி சிங் என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தநிலையில், கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி காலையில் அவருக்கு பிரசவ வலியெடுத்தது. இதையடுத்து, அவருடைய குடும்பத்தினர் ஓலா நிறுவன காரில் அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில், சுமார் 5, 6 கிலோமீட்டர் சென்ற நிலையில், அப்பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால், கார் ஒட்டுநர் யஷ்வந்த் காரை மெதுவாக ஓட்டியுள்ளார்.
இதன்பின், அப்பெண்ணுக்கு மேலும் வலி அதிகரிக்கவே, அப்பெண்ணின் உறவினர்கள் காரிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். இதில், அப்பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, யஷ்வந்த் காரை மெதுவாக இயக்கி பெண்ணையும், குழந்தையும் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, திறம்பட செயல்பட்ட கார் ஓட்டுநரை ஓலா நிறுவனம் வெகுவாக பாராட்டியுள்ளது. அதைவிட அப்பெண்ணுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பையும் ஓலா நிறுவனம் வெளியிட்டது.
அப்பெண்ணும் குழந்தையும் 5 வருடங்களுக்கு ஓலா காரில் இலவசமாக பயணித்துக் கொள்ளலாம் என ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக, அக்குழந்தையின் பெயரில் சிறப்பு கூப்பன் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளது ஓலா நிறுவனம்.