பஞ்சாப் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள குர்தாஸ்பூர் தொகுதியின் பாஜக வேட்பாளர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருப்பது, அக்கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த வேட்பாளர் அப்பெண்ணுடன் மிக நெருக்கமாக உள்ள புகைப்படங்களும் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஸ்வரான் சலாரியா, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மும்பையை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், 1982-2014-ஆம் ஆண்டு காலகட்டத்தில் , ஸ்வரான் சலாரியா தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் உறவில் ஈடுபட்டிருந்ததாக குற்றம்சாட்டி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 2014-ஆம் ஆண்டு தன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது என ஸ்வரான் சலாரியா ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ள அப்பெண், 32 வருடங்கள் தன்னை பாலில ரீதியாக கொடுமைப்படுத்திவந்ததாகவும் தன் புகார் மனுவில் தெரிவித்தார்.
இதுதவிர, அவர் ஸ்வரான் சலாரியாவுடன் இருந்ததாக கூறப்படும் மிக நெருக்கமான புகைப்படங்களையும் பொதுவெளியில் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே அப்பெண் தன் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக, ஸ்வரான் சலாரியா அப்புகார்களை மறுத்தார்.
இதனிடையே, அவரது வேட்புமனு தாக்கலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. மேலும், தன் மீதான குற்ற வழக்குகளை மறைத்து அவர் வேட்பு மனு தாக்கல் செய்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.