Advertisment

குவாட் கூட்டத்தில் இந்தியாவின் நிலைப்பாடு: சீனா மீது கடுமை; உக்ரைன் விவகாரத்தில் அமைதி; மியான்மர் குறித்து எச்சரிக்கை...

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி ஜே பிளிங்கன், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மரிஸ் பெய்ன் மற்றும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி ஆகிய மூவரின் நிலைப்பாட்டைக் காட்டிலும் ரஷ்யா-உக்ரைன் மற்றும் மியான்மர் விவகாரத்தில் சில நுணுக்கமான/மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர்.

author-image
WebDesk
New Update
குவாட் கூட்டத்தில் இந்தியாவின் நிலைப்பாடு: சீனா மீது கடுமை; உக்ரைன் விவகாரத்தில் அமைதி; மியான்மர் குறித்து எச்சரிக்கை...

Quad Meeting : விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான பகிரப்பட்ட பார்வையை பின்பற்றுகின்றோம் என்ற ஒரு தெளிவான சமிக்ஞையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் பெய்ஜிங்கிற்கு அனுப்பியுள்ளார். வெள்ளிக்கிழமை அன்று ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்னில் குவாட் கூட்டம் நடைபெற்றது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்து பல்வேறு ராஜதந்திர விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

Advertisment

கூட்டத்திற்கு பிறகு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி ஜே பிளிங்கன், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மரிஸ் பெய்ன் மற்றும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி ஆகிய மூவரின் நிலைப்பாட்டைக் காட்டிலும் ரஷ்யா-உக்ரைன் மற்றும் மியான்மர் விவகாரத்தில் சில நுணுக்கமான/மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர்.

இந்திய-மியான்மர் எல்லையில் கிளர்ச்சியின் சவாலை சுட்டிக்காட்டிய ஜெய்ஷங்கர், போராட்டக்காரர்கள் நடத்திய கிளர்ச்சியில் உயிரிழந்த கர்னல் மற்றும் அவரின் குடும்பத்தினர் குறித்து மேற்கோள்காட்டினார். ஆனாலும், இந்தியா தேசிய அளவில் மற்ற நாடுகள் மீது விதிக்கப்படும் தடைகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்டார். ஆனால் அமெரிக்கா மியான்மர் ஜன்தா தலைவர்கள் மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ளது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நடவடிக்கைகளுக்கு மௌனத்தையே கடைபிடித்தார் ஜெய்ஷங்கர். உக்ரேனிய எல்லைக்கு வரும் புதிய படைகள் உட்பட ரஷ்ய விரிவாக்கத்தின் அறிகுறிகள் சிக்கல் வெளிப்படத் துவங்கியுள்ளது. எப்போது வேண்டுமானாலும், படையெடுப்பு துவங்கலாம் என்ற நிலையில் தான் தற்போது இருநாடுகளும் உள்ளன என்று பிளிங்கன் தெரிவித்தார்.

உக்ரைன் எல்லையில் ரஷ்யாவின் படைகள் குவிக்கப்பட்டிருப்பது கவலையை ஏற்படுத்துகிறது என்று கூறிய ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர், உக்ரைனின் இறையாண்மையை காக்க முழுமையான ஆதரவை தங்களின் நாடு வழங்கும் என்றும் கூறினார்.

"இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு" தொடர்ந்து ஜப்பானால் ஆதரிக்கப்படுவதாகவும், குவாட் ஆலோசனைக் கூட்டத்தில் உக்ரைன் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் ஜப்பானின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்.

ரஷ்ய மற்றும் சீன அதிபர்களின் சமீபத்திய சந்திப்பு குறித்து ஜெய்ஷங்கரிடம் கேள்வி எழுப்பிய போது, எங்கள் சக தலைவர்கள் இது தொடர்பாக தொடர்ந்து கவனித்து வருகின்றனர் என்று நான் கூற விரும்புகிறேன். மேலும் நாங்கள் எந்த நாட்டிற்கும் எதிரானவர்கள் அல்ல என்றும் கூறியுள்ளார். வெளியுறவுத்தலைவர்களின் இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் உக்ரைன் விவகாரம் குறித்து குறிப்பிடப்படவில்லை.

ஆனால் மியான்மர் விவகாரம் குறித்து இடம் பெற்றிருந்தது. நாங்கள் மியான்மரில் நிலவி வரும் சூழல் குறித்து அக்கறை செலுத்துகிறோம். அங்கே நடைபெறும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறுகிறோம். மேலும் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டிருக்கும் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மியான்மரில் தீர்வு காணும் ஆசியான் முயற்சிகளுக்கு நாங்கள் எங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம் மற்றும் ஆசியானின் ஐந்து-புள்ளி ஒருமித்த கருத்தை அவசரமாக நடைமுறைப்படுத்தவும், மியான்மரை ஜனநாயகத்தின் பாதைக்கு விரைவாக திரும்பவும் இராணுவ ஆட்சிக்கு அழைப்பு விடுக்கிறோம். வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கூட்டத்திற்கு பிறகு மியான்மர் குறித்து பேசிய பிளிங்கன், அங்கே நிலவி வரும் சூழல் நம் அனைவருக்கும் கவலையை தருகிறது என்று குறிப்பிட்டார்.

தன்னுடைய கேள்விக்கு பதில் அளித்த ஜெய்ஷங்கர், “மியான்மரில் நடைபெற்று வரும் ஜனநாயக மாற்றத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் அனைவரும் ஒப்புக்கொண்டோம். நாடு தெளிவாக வேறோரு திசையில் முன்னேறிச் செல்கிறது என்பது நம் அனைவரையும் வருத்தமடைய செய்கிறது. மியான்மர் மீதான ஆசியான் நிலைப்பாட்டையும், பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான அவர்களின் முயற்சிகளையும் மிகவும் வலுவாக ஆதரிக்கிறோம் என்று கூறினார்.

இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடு என்பதால் எங்களுக்கு இது மேலும் கவலையை தருகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு மூத்த இராணுவ அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொன்ற கிளர்ச்சியாளர்கள் பற்றிய கவலைகள்; கோவிட் பற்றிய கவலைகள்; போதுமான தடுப்பூசி இல்லாதது தொடர்பான கவலைகள்; உணவு பற்றாக்குறையால் எழும் மனிதாபிமான சூழ்நிலை பற்றிய கவலைகள் என்பது போன்ற கவலைகள் எங்களின் சிந்தனையை வழிநடத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய கவலைகளை நாங்கள் கொண்டிருக்கும் இடத்தில் தேசிய அளவில் தடைகள் விதிப்பதற்கான கொள்கைகளை பின்பற்றுவதில்லை என்று அவர் கூறினார். இது அமெரிக்கா, மியான்மர் மீது விதித்திருக்கும் பொருளாதார தடையை ஆதரிக்கவில்லை என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

இந்த ஆண்டின் முதல் பாதியில் நரேந்திர மோடி உட்பட குவாட் நாடுகளின் தலைவர்கள் ஜப்பானில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் ஈடுபடுவார்கள் என்று ஹயாஷி கூறினார்.

ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கான மரியாதை, சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை, சர்வதேச கடல்களில் பயணிக்கும் உரிமை மற்றும் சர்ச்சைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் மரியாதை அளித்து ஜனநாயக நாடுகளாக, நாங்கள் விதிமுறைகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்த எங்களின் பார்வையை தொடர்ந்து வெளிப்படுத்துவோம் என்று அவர் தெரிவித்தார்.

பயங்கரவாதம் குறித்தும் குவாட் தலைவர்களின் கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பயங்கரவாத பினாமிகளைப் பயன்படுத்துவதை நாங்கள் கண்டிக்கிறோம் மற்றும் பயங்கரவாத புகலிடங்களை ஒழிக்க ஒன்றாக பணியாற்றுமாறு உலக நாடுகளை வலியுறுத்துவோம் என்றும், பயங்கரவாத நெட்வொர்க்குகள் மற்றும் அவற்றைத் தாங்கும் உள்கட்டமைப்பு மற்றும் நிதி வழிகளை அழித்தல், பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய நடமாட்டத்தை நிறுத்துதல் போன்றவை குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. அனைத்து நாடுகளும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்து, அத்தகைய தாக்குதல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாக சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

26/11 மும்பை மற்றும் பதான்கோட் தாக்குதல்கள் உட்பட இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு நாங்கள் மீண்டும் கண்டனம் தெரிவிக்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் பயத்தை ஏற்படுத்தும் வகையில் எந்த நாட்டையும், தங்குமிடத்தையும் அச்சுறுத்தவோ அல்லது தாக்கவோ, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்தல், அல்லது பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிடுதல் அல்லது நிதியளித்தல் போன்ற செயல்களுக்காக ஆப்கன் பிரதேசத்தை பயன்படுத்தக்கூடாது என்ற UNSC தீர்மானம் 2593 (2021) ஐ மீண்டும் உறுதிப்படுத்தினர்.

கொரோனா தொற்றின் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற இந்த சமயத்தில் குவாட் நாடுகள் 500 மில்லியன் தடுப்பூசிகளை ஒட்டுமொத்தமாக வழங்கியுள்ளது. 1.3 பில்லியன் தடுப்பூசிகளை உலகம் முழுவதும் வழங்க நாம் ஏற்கனவே உறுதி பூண்டுள்ளோம். 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் குறைந்தது 1 பில்லியன் தடுப்பூசிகளை வழங்குவதை இலக்காகக் கொண்ட இந்தியாவில் உள்ள பயோலாஜிக்கல் இ லிமிட்டட் தடுப்பூசி உற்பத்தி மையத்தை விரிவுப்படுத்துவதில் குவாட் நாடுகள் ஏற்படுத்தியிருக்கும் விரிவான முன்னேற்றம் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment